top of page
Search

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் ... 276, 275

27/12/2023 (1026)

அன்பிற்கினியவர்களுக்கு:

பசுவைப் போல் வேடமிட்டு ஏமாற்றும் ஓநாய்களைப் போல கயவர்கள் இல்லை என்கிறார். ஏனெனில், அவர்களின் நோக்கமே வேட்டையாடுவதுதான். அதுவும் தங்களை மறைத்துக் கொண்டு நம்பியவர்களை நய வஞ்சகமாக கழுத்தை அறுப்பது. இது பெரும் கொடுமை.


நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணா ரில். – 276; - கூடா ஒழுக்கம்


நெஞ்சில் துறவார் = துறவினை நெஞ்சினில் ஏற்றுக் கொள்ளாமல்; துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் = தோற்றத்தில் தாம் எல்லாவற்றையும் துறந்து விட்டதைப் போன்று நடித்துப் பிறரை வஞ்சித்துத் தமக்கு இரையாக்குபவர்களைப் போன்ற; வன்கணார் இல் = மிக மோசமான கயவர்கள் இல்லை.


துறவினை நெஞ்சினில் ஏற்றுக் கொள்ளாமல், தோற்றத்தில் தாம் எல்லாவற்றையும் துறந்து விட்டதைப் போன்று நடித்துப் பிறரை வஞ்சித்துத் தமக்கு இரையாக்குபவர்களைப் போன்ற மிக மோசமான கயவர்கள் இல்லை.

 

நம்பிக்கைத் துரோகம் என்பது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஈனச் செயல். அதுவும், வேடமிட்டுக் கொண்டு வேட்டையாடுவது அதனினும் கொடுமை என்கிறார்.

 

அவர்களுக்கு நம் பேராசான் தரும் எச்சரிக்கை என்னவென்றால், அவ்வாறு வாழ்பவர்கள் முதலில் ஏதோ இன்பம் பெறுவதைப் போல் எண்ணிணாலும் பின்னர் அந்தச் செயல்களை “ஏன் செய்தோம்? ஏன் செய்தோம்?” என்று காலத்திற்கும் வருந்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்களாம்.


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்

றேதம் பலவுந் தரும். – 275; கூடா ஒழுக்கம்

 

படிற்று = மறைத்து; பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் = எனக்கு என்ன தேவை?  ஒன்றுமில்லை என்று வாயளவில் கூறிக்கொண்டு தமது கீழ்த்தரமான எண்ணக்கிடக்கைகளைச் செயல்படுத்தும் கயவர்களின் ஒழுக்கமானது; எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் = பின்னர், அந்த ஒழுக்கக் கேடான செயல்களை “ஏன் செய்தோம்?”, “ஏன் செய்தோம்?” என்று வருந்தும் அளவிற்குத் துன்பங்கள் பலவற்றைக் கொடுக்கும்.

 

எனக்கு என்ன தேவை?  ஒன்றுமில்லை என்று வாயளவில் கூறிக்கொண்டு தமது கீழ்த்தரமான எண்ணக்கிடக்கைகளைச் செயல்படுத்தும் கயவர்களின் ஒழுக்கமானது, பின்னர், அந்த ஒழுக்கக் கேடான செயல்களை “ஏன் செய்தோம்?”, “ஏன் செய்தோம்?” என்று வருந்தும் அளவிற்குத் துன்பங்கள் பலவற்றைக் கொடுக்கும்.

 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போவான்? நிச்சயம் ஒரு நாள் உண்டு.


கவியரசர் கண்ணதாசன் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறை செல்ல வேண்டி வந்தது. அந்தச் சிறையில் ஒரு தூக்குத் தண்டனைக் கைதியைச் சந்தித்தாராம். இன்னும் சில திணங்களில் தண்டனை நிறைவேற்றப் போகிறார்களாம். இது போன்று தண்டனைப் பெற்றக் கைதிகள் தண்டனை நிறைவேறும் காலம் நெருங்க நெருங்க ஒரு விதமான பதற்றத்தில் இருப்பர்களாம்.


ஆனால், அவனிடமோ எந்தப் பதற்றமும் தெரியவில்லையாம். அவன் தன்மட்டில் அமைதியாகவே இருந்தானாம். இது சற்று நெருடலைத்தர நம் கவியரசர் நெருங்கிச் சென்று விசாரித்தாரம். என்ன குற்றம்? ஏன் உனக்கு இவ்வளவு பெரிய தண்டனை? என்றாராம். அவனின் பதில் அவருக்கு ஆச்சரியத்தை அளித்ததாம்.


ஒரு கொலைக் குற்றத்திற்காகத் தண்டனையாம். ஆனால், அந்தக் கொலையை அவன் செய்யவில்லையாம். கவிஞருக்கு மேலும் குழப்பம். என்னப்பா, நீ செய்யாத குற்றத்திற்குத் தண்டனை என்கிறாய். ஏன், இந்தத் தண்டனையை மறு பரிசீலனைச் செய்யச் சொல்லலாமே. அது மட்டுமின்றி மிகவும் அமைதியாகவே இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்வது போலத் தெரிகிறதே? என்றாராம்.


உண்மைதான் ஐயா, இந்தக் குற்றத்தை நான் செய்யவில்லை. ஆனால், அதைக் குறித்து நான் கவலை கொள்ளவும் இல்லை. என் மனம் இப்போதுதான் அமைதியாக இருக்கிறது. ஏன் எனில், நான் முன்பு செய்தவைகளுக்கு நான் பெறப்போகும் தண்டனை ஏற்புடையதுதான் என்றானாம்!


நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி …


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page