top of page
Search

நிறையுடையேன் என்பேன்மன் ... 1254, 1255, 10/04/2024

Updated: Apr 10

10/04/2024 (1131)

அன்பிற்கினியவர்களுக்கு:

புலி பாயும் தூரம் சராசரியாக 20 அடி இருக்கலாம். ஆனால், இந்தத் தும்மல் இருக்கே, அது 26 அடி தூரம்கூட போகுமாம்! தும்மலை அடக்கக் கூடாது.

 

தும்மலை அடக்கினால் என்ன விதமான சிக்கல்கள் வரலாம் என்று ஒரு நண்பர் வினவியிருந்தார்.

 

தும்மல் கிருமிகளால் வைரஸ்களால் வரலாம் என்பது நமக்குத் தெரியும். சூரிய ஒளிக் கதிர்களால்கூடத் தும்மல் வரலாமாம். வெயில் கொளுத்தும் இந்த நாள்களில் கவனமாக இருப்பது நலம்.

 

தும்மலை அடக்கினால் முச்சுக் குழாயில் ஓட்டை ஏற்படலாம்; தொண்டையில் புண் ஏற்படுமாம், அதனால் சாப்பிடுவதில் சிக்கல் உண்டாகலாமாம்; செவிப் பறை கிழியுமாம்; இரத்தக் குழாயில் வீக்கம் ஏற்படலாம் – இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்!

 

தும்மலை அடக்கும் பொழுது மூச்சுக் குழாயில் 20 மடங்கு அழுத்தம் அதிகரிக்குமாம்.

 

சீட் பெல்ட் (seat belt) போட்டுக் கொண்டு வாகனத்தை இயக்குபவர்கள் கட்டாயமாகத் தும்மலை அடக்கவே கூடாது. பிரிட்டனில் ஒருவருக்குத் தொண்டையிலிருந்து தானாகவே, அகில இந்திய வானொலி போல, கர கரன்னு சத்தம் வந்து கொண்டே இருந்ததாம். இந்தச் சிக்கலுக்குத் தும்மலை அடக்கியதுதான் காரணம் என்று கண்டுபிடித்துச் சிகிச்சை செய்தார்களாம்.

 

நம்மைப் பாதுகாப்பாக (self defense mechanism) வைத்திருக்கவே தும்மல் வருகிறது. அது நம் உடலில் புகுந்து கொண்ட ஒவ்வாதனவற்றை வெளியேற்றுகிறது. அது மற்றவர்களைத் தாக்கா வண்ணம் மூக்கையும் வாயையும் மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். இதுவும் முக்கியம்.

 

தும்மல் புராணம் போதுமென்று நினைக்கிறேன். தும்மலைப் போல் காமக் கிளர்ச்சியும் ஒரு இயற்கையான நிகழ்வே. தும்மலைப் போலவே அதனையும் பாதுகாப்பாகவே கையாள வேண்டும்.

 

மறை என்பது நாம் மறைத்து வைக்க வேண்டியன. நம் அனைத்து எண்ணங்களையும், செயல்களையும் அனைவர்க்கும் வெளிப்படுத்த முடியாது. ஆனால், மறை கழண்டு போனவர்களுக்கு இது புரிவதில்லை. நான் இதுவரைக்கும் மறை என்றால் Screw/bolt என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் “மறை கழன்டது” என்று! இது நிற்க.

 

அவள் என்ன சொல்கிறாள் என்றால் “மறை இறந்து மன்றுபடும்” என்கிறாள்! அஃதாவது,  தான் மறைத்தன அனைத்தும் தன்னையும் மீறி வெளிப்பட்டுவிடுமோ என்று ஐயப்படுகிறாள்.

 

நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்

மறையிறந்து மன்று படும். – 1254; - நிறை அழிதல்


நிறை = சுய மரியாதை; யானோ நிறை உடையேன் என்பேன் = நான் சுயமரியாதையுடன் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் = ஆனால், இதுவரை நான் கட்டிக் காத்து மறைத்து வைத்துள்ள அவரின் மேல் உள்ள அளவு கடந்த ஈர்ப்பு, அனைவர்க்கும் வெளிப்பட்டு நிற்குமோ? மன் - ஒழியிசை


நான் சுயமரியாதையுடன் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இதுவரை நான் கட்டிக் காத்து மறைத்து வைத்துள்ள அவரின் மேல் உள்ள அளவு கடந்த ஈர்ப்பு, அனைவர்க்கும் வெளிப்பட்டு நிற்குமோ?


அடுத்துவரும் பாடல் என் நெஞ்சுக்கு மிக நெருக்கமான பாடல். சுற்றத்தையும் நட்பையும் காப்பார்றிக் கொள்ள வேண்டும் என்றால் இந்தக் குறளை கவனத்தில் வைத்தால் போதும். இது ஏதோ காமத்துப்பாலில் சொல்லியுள்ள பாடல் என்று எண்ண வேண்டா.


இந்தப் பாடலை நாம் சிலமுறை சிந்தித்துள்ளோம். காண்க 10/03/2022, 11/08/2022, 05/04/2024. மீண்டும் ஒருமுறை:


செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன் றன்று. - 1255; - நிறையழிதல்

 

நம்மை வேண்டாம் என்று சொல்பவர்கள் பின் மீண்டும் செல்லாமல் இருப்பதுதான் சுயமரியாதை. ஆனால், அன்பிலே கட்டுண்டவர்களுக்கு அந்தப் பண்பு தெரியாது.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page