top of page
Search

நிலவரை நீள்புகழ் ... 234, 966

30/11/2023 (999)

அன்பிற்கினியவர்களுக்கு:

தொடர்ந்து வரும் 234 ஆவது குறள் சற்று சிந்திக்க வைக்கிறது என்றோம்.

குறளைப் பார்த்துவிடுவோம். அப்போதுதான் எனது குழப்பம் உங்களுக்கும் புரியும்.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. - 234; புகழ்

 

இந்தக் குறளில்தான் நிலவரை, புலவரை என்று பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் நிலவரை என்பதற்கு இந்த நிலத்தின் எல்லை என்றும் புலவரை என்பதற்கு புலமை கொண்டோரை என்றும் பொருள் எடுக்கிறார்கள். அவ்வாறு உள்ள உரைகளில் சில:

 

மூதறிஞர் மு. வரதராசனார்: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. புலவர் = தேவர்.

 

மணக்குடவப் பெருமான்: ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது. புலவர் = தேவர்.

 

புலவர் புலியூர்க் கேசிகன்: உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.

 

நீங்கள் கவனீத்தர்கள் என்றால் புத்தேள் உலகம் என்பது வானுலகம், தேவர் உலகம் என்ற பொருளில் கையாள்கிறார்கள்.

 

சரி, எனது சிந்தனை முடிச்சுகள் கீழ்காணுமாறு:

 

வரை என்றால் வரம்பு, எல்லை. நில வரை என்றால் இந்த நிலப்பரப்பின் எல்லை. புல வரை என்றால்? தமிழில் நிலபுலம் என்கிறோம். நிலபுலம் நிறைய வைத்திருக்கிறான் என்கிறோம். அஃதாவது, அவன் வசிக்கும் இடம் மட்டுமல்லாது அவன் வசிக்காமல் பிற பயன்பாடுகளுக்காகப் பல இடங்களையும், பலவற்றையும் வைத்திருக்கிறான் என்று பொருள்.

 

அப்போது, நில வரை என்று பொதுவாகச் சொன்னால் நாம் அனைவரும் வாழும் இந்த உலகத்தின் எல்லை அல்லது இந்த உலகில் உள்ளவரை என்று பொருள்படுகிறது. புல வரை என்றால் நம்மால் உணரப்படாத அறிவிற்கு எட்டாத வெளிஉலகங்களின் வரம்பு என்றாகிறது.

 

நிலவரை = நிலவர் + ஐ என்று பிரிக்கலாம். நிலவர் என்றால் இந்த நிலத்தில் வாழ்பவர் அல்லது நிலத்தைச் சார்ந்திருப்பவர் என்று பொருள்படும்.

 

புலவரை = புலவர் + ஐ. புலவர் என்றால் புலமையைச் சார்ந்திருப்பவர் அல்லது புலமை கொண்டவர் என்று பொருள்படும்.

 

புத்தேள் உலகம் என்றால் மாறி வரும் காலங்களில் அதன் தன்மைக்கு ஏற்ப உருவாகிக் கொண்டிருக்கும் புதுமையான உலகம் (Modern world) என்றும் பொருள் எடுக்கலாம்.

 

முன்பு குறள் ஒன்றினைப் பார்த்தோம். காண்க 11/08/2022. மீள்பார்வைக்காக:

 

புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை. - 966; - மானம்

 

நம் குடியை, நம்மை இகழ்வார்கள் பின் சென்று நின்று மானத்தை இழக்கும் நிலையை விரும்புவது ஏன்? அதனால், புகழும் கிடைக்காது; புத்தேள் நாட்டிலும் இடமிருக்காது. அஃதாவது,வரப் போகும் காலங்களிலும் அது ஏற்புடையதாக இருக்காது.

 

சரி, இப்போது என்ன சொல்ல வருகிறாய் என்கிறீர்களா? இதோ வருகிறேன். அந்தக் குறளுக்கு இரு வேறு பார்வைகள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. - 234; புகழ்

முதல் பார்வை:

நீள்புகழ் நிலவரை ஆற்றின் = நீண்ட காலங்களுக்குப் புகழினைத் தரும் செயல்களை இந்த நிலத்தில் இருக்கும்வரை செய்தால்;  புத்தேள் உலகு புலவரைப் போற்றாது = இனி வரப்போகும் புதிய உலகம் நீ செய்த செயல்களைத்தாம் நினைவு கூறும். அவ்வாறில்லாமல், நீ சேர்த்து வைத்திருக்கும் நில புலன்களின் எல்லைகளைப் போற்றாது.  

 

நீண்ட காலங்களுக்குப் புகழினைத் தரும் செயல்களை இந்த நிலத்தில் இருக்கும்வரை செய்தால், இனி வரப்போகும் புதிய உலகம் நீ செய்த செயல்களைத்தாம் நினைவு கூறும். அவ்வாறில்லாமல், நீ சேர்த்து வைத்திருக்கும் நில புலன்களின் எல்லைகளைப் போற்றாது. 

 

இரண்டாம் பார்வை:

நீள்புகழ் நிலவரை ஆற்றின் = நீண்ட காலங்களுக்குப் புகழினைத் தரும் செயல்களை இந்த நிலத்தில் இருக்கும்வரை செய்தால்;  புத்தேள் உலகு புலவரைப் போற்றாது = இனி வரப்போகும் புதிய உலகம் நீ செய்த செயல்களைத்தாம் நினைவு கூறும். அவ்வாறில்லாமல், வெறும் புலமையை மட்டும் பயன்படுத்தி வாழும்  புலவர்களைப்  போற்றாது. வாய்ச்சொல் வீரர்களைப் போற்றாது.

 

நீண்ட காலங்களுக்குப் புகழினைத் தரும் செயல்களை இந்த நிலத்தில் இருக்கும்வரை செய்தால், இனி வரப்போகும் புதிய உலகம் நீ செய்த செயல்களைத்தாம் நினைவு கூறும். அவ்வாறில்லாமல், வெறும் புலமையை மட்டும் பயன்படுத்தி வாழும்  புலவர்களைப்  போற்றாது.  அஃதாவது, வாய்ச்சொல் வீரர்களைப் போற்றாது.

உங்கள் கருத்து என்ன?

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page