top of page
Search

பொது நோக்கான் ... 528

24/12/2022 (660)

தமிழ் இலக்கியங்கள் வரிசை முறையை வலியுறுத்துகின்றன. அது என்ன வரிசை முறை?

புறநானூறில் 47ஆவது பாடலில் ஆறாவது வரி:


“...வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை,...”


அதாவது, புலவர்கள், அரசர்கள் தரும் பரிசுகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தக் காலம். சில அரசர்கள் என்ன செய்வார்களாம், வந்திருக்கும் அனைத்துப் புலவர்களுக்கும் கொஞ்சம் பனம் கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்லிவிடுவாராம். அமைச்சர்களும் அனைவருக்கும் ஒரு போல கொஞ்சம் பணம் கொடுப்பார்களாம்.


புலமையைப் பார்த்து அதற்கேற்றார் போல இந்த அரசன் பரிசு வழங்க மாட்டானா, இது என்ன ஒரு கேவலமான வாழ்க்கை என்று நொந்து கொள்வார்களாம்.


இது பெரும் புலவர்களுக்கு மிகவும் அவமானமாக இருக்குமாம். புலமையைப் பாராட்டத் தெரியாமல் பிச்சையைப் போல போடும் இந்த பரிசுக்கா இந்த வாழ்க்கை என்று அந்தப் பணத்தை வாங்காமல் திரும்பி விடுவார்களாம்.


அரசன் எல்லோருக்கும் பொதுவாக நடக்க வேண்டும் என்றாலும், தகுதியைப் பார்த்து சிறப்புகள் செய்ய வேண்டும். இல்லையென்றால், தகுதியுடையோர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள். “First among equals” என்பார்கள் ஆங்கிலத்தில். “Primus inter pares” என்ற லத்தீனிய பழமொழியில் இருந்து வந்தது.


அதைத்தான் தமிழர்கள் “முதல் மரியாதை” என்றார்கள். பெரியவர்களுக்கும், சான்றோர்களுக்கும் முதலில் மரியாதை செய்வது தலைமையின் கடமை.


பண்டைய திருமண நிகழ்வுகளில், பெரியவர்களுக்கு உரிய மரியாதையை தராவிட்டால் அது பெரும் குற்றம் போலப் பார்க்கப்படும்.


நாம் இப்போது திருமண வரவேற்பு நிகழ்வுகளில் பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடில்லாமல், அவர்களை நீண்ட வரிசையில் நிற்க வைக்கும் மேற்கத்திய வழக்கத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம். அதுவும், அவர்கள் தரப்போகும் வாழ்த்துகளுக்காகவும், பரிசுகளுக்காவும்! எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?


எனது ஆசிரியர் மிகவும் வருந்தும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.


படிக்காதவனின் மனம் வருந்தும் என்று நன்றாக படிப்பவர்கள் யார் என்று சொல்லக் கூடாதாம்! அதனால். சில ஆண்டுகளாக, பள்ளி இறுதி தேர்வுகளில் முதல் இடம் பெறுபவர்களை அறிவிக்கக் கூடாது என்று அரசு கட்டளை!


இதையே, விளையாட்டு போட்டிகளில் செய்ய இயலுமா?


சரி, இப்போது இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா? இந்தச் செய்திகளைச் சொல்லச் சொன்னவர் நம் பேராசான்தான்


அரசன் பொதுவாக நோக்காமல், அவர், அவர் தரங்களுக்கு ஏற்றார் போல ஆராய்ந்து நோக்கி சிறப்புகள் செய்வானாயின் அது நோக்கி சான்றோர்கள் கூட்டம் தங்கும், பெருகும்.


பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.” --- குறள் – 528; அதிகாரம் – சுற்றந்தழால்


பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் = எல்லோரையும் ஒரு போல பார்க்காமல், தலைவன் அவர் அவர் தகுதிகளைப் பார்த்து சிறப்புகள் செய்வானாயின்;

அதுநோக்கி வாழ்வார் பலர் = அதைப் பார்த்து மகிழ்ந்து, அந்தச் சான்றோர்கள் கூட்டம் தங்கும், பெருகும்.


“Employees turnaround time” என்கிறார்கள். அதாவது, எவ்வளவு காலம் பணி புரிபவர்கள் தொடர்கிறார்கள் என்பதைக் குறிக்கும் ஒரு அளவீடு. இது மிக குறைவாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மதிப்பே குறையும்!


உயர்ந்தவர்களுக்குச் சிறப்பு செய்வோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.

உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page