top of page
Search

பெயக்கண்டும் நஞ்சு ... 580

08/02/2023 (706)

“பகைவனுக்கு அருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக்கு அருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!

பூமியிற் கண்டோமே!

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!

பரமன் வாழ்கின்றான்...” --- மகாகவி பாரதி


பகைவனுக்கும் அருள்வாய் என்றார் நம் பேராசான்.


நண்பனா, மிக நல்லது. கேள்வியே கேட்காதே. அவன் நஞ்சினை அளித்தாலும்

உடனே பருகிடு. அதுதான் நயத்தக்க நாகரிகம்! அதுதான் அவனுக்கு காட்டும் இரக்கம் என்கிறாரா? நம் பேராசான். இது விநோதமாக இல்லையா?


பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.” --- குறள் 580; அதிகாரம் – கண்ணோட்டம்


நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் = (நண்பர்கள்) நஞ்சினையே கொட்டினாலும் அதனையும் ஏற்றுக் கொண்டு அவருடன் இருப்பர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் = யாவராலும் விரும்பத்தக்க நாகரிகம் வேண்டுபவர்.


சிந்தனையாளர் சாக்ரடீஸிற்கு இன்னும் சில மணித்துளிகளில் ‘ஹெம்லாக்’ (Conium maculatum) எனப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட தாவரத்திலிருந்து தயாரித்த விஷத்தைக் கொடுக்கப் போகிறார்கள். (இன்னும் கொடுக்கவில்லை.)


அவர், அந்தச் சிறைச் சுவர்களைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி, தள்ளாடி நடப்பது போல நடந்து கொண்டுள்ளார்.


அப்போது அந்தச் சிறையிலிருந்த ஒருவர் கேட்கிறார்: “ஐயா, என்ன செய்து கொண்டு இருக்கீங்க?”

சாக்ரடீஸ் பெருமகனார் சொல்கிறார், “அந்த விஷம் கொடுக்கப் போறாங்க இல்லையா, அது குடித்த உடனே உடம்பு தடுமாறும். அப்போது, எப்படி சமாளித்து நடப்பது என்பதை பயிற்சி செய்கிறேன்” என்றாராம்!


அதாவது, கொடுத்தவர்களை நண்பர்களாக நினைத்து குடித்துவிட்டாரா என்ன?

அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் உரையிலே, யாரையுமே அவர் கண்டிக்கவில்லை.


சாக்ரடீஸ் பெருமகன் நீதிமன்றத்தில் ஆற்றிய உரை ‘மன்னிப்பு’ (,– Defense speech) என்று அழைக்கப் பெறுகிறது. கி.மு. 399 ல் அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதாக கணக்கிடுகிறார்கள். சாக்ரடீஸ் பெருமகனார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பத்தி:


“... But some of you will ask, "Don't you regret what you did since now it might mean your death?" To these, I answer, "You are mistaken. A good man should not calculate his chances of living or dying. He should only ask himself whether he is doing right or wrong—whether his inner self is that of a good man or of an evil one..."


“...சிலர் கேட்கலாம்: "நீங்கள் செய்த செயல்களுக்காக உங்களுக்கு மரண தண்டனை வருமே வருந்தவில்லையா?” என்று. உங்களுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், “உங்கள் எண்ணம் தவறு. ஒரு நல்ல மனிதன் என்பவன் வாழ்வா, சாவா என்று கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. அவன் கேட்டுக்கொள்ள வேண்டியது, அவன் செய்யும் செயல்கள் சரியா, தவறா” என்பதுதான். மேலும், அவனின் உள்மனம் “அவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று மட்டும், எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்..."


இது நிற்க.


அவர் அப்போது பேசியது ஆங்கிலம் அல்ல! பண்டைய கிரேக்கம். இது நாள் வரை கிரேக்கம் தான் நீண்ட நெடிய எழுத்து வரலாறு கொண்டது என்கிறார்கள். ‘Linear B’ என்ற ஒரு வகை கிரேக்க எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு, அதன் காலம் 1450 கி.மு.- 1350 கி.மு. இருக்கலாம் என்கிறார்கள்.


தமிழகத்தில் தற்போது ‘தமிழி’ எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் ஓடுகள் கீழடியிலும், ஆதிச்சநல்லூரிலும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவைகளின் காலம் 580 கி.மு. என்று கணிக்கப்படுகிறது.


இதுவும் நிற்க.


இரக்கம், கடமையோடு சேர்ந்த இரக்கம், கண்டிப்போடு இரக்கம் என்று அடுக்கிக் கொண்டே வந்த நம் பேராசான், திடீர் திருப்பமாக, நண்பனா, அவன் விஷத்தைக் கொடுத்தாலும் குடித்துவிடு அதுதான் இரக்கம் என்கிறார் போல அந்தப் பாடல் அமைந்துள்ளது. ஆனால், அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.


அவர் சொல்லிக்கொண்டிருப்பது பொருட்பாலில், தலைமைக்குத் தேவையான கருத்துகளை!


நல்ல நண்பனின் செயல்கள் ஒரு போதும் நஞ்சாகா. ஏதோ ஒரு சமயம், நண்பனின் செயல்கள் நஞ்சினைப் போல் இருந்தால், அதை, அவன் அறியாமல் செய்கிறான் என்று கருதி இரக்கம் காட்ட வேண்டும் என்பதுதான் நம் பேராசானின் கருத்தாக இருக்கவேண்டும்.

நண்பனா இப்படிச் செய்தான்! என்று துரோகி பட்டம் கட்டி அதிக கோபம் காட்டுவது இவ்உலக இயற்கை, அது கூடாது.


அதாவது, இரக்கம் முக்கியம்; அதுவும் கடமையுடன் இரக்கம்; மேலும் கண்டிப்புடன் இரக்கம்; செழுமிய நட்பு எப்போதாவது தவறினாலும் அப்போதும் இரக்கம் என்றுதான் அடுக்குகிறார் என்று நினைக்கிறேன்.


தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது...


நீண்ட நெடிய பதிவாகிவிட்டது. இதுவரையா படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?


வாழிய நீவிர்!


உங்கள் அனைவரையும் எனது மனம், மொழி, மெய்களால் வணங்குகிறேன்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page