top of page
Beautiful Nature

பன்மாயக் கள்வன் ... 1258, 1259, 12/04/2024

12/04/2024 (1133)

அன்பிற்கினியவர்களுக்கு:

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

அந்த பெண்மையின் நிலை என்ன?

மௌனம் …

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

காதல் …

இரவும் பகலும் உன்னுருவம் அதில்

இங்கும் அங்கும் உன் உருவம் …

 

அவன்: அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை

அறிந்தால் மறையும் என்னுருவம் …

 

அவள்: மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை

மறக்க முயன்றேன் நடக்கவில்லை … கவியரசு கண்ணதாசன், சாரதா, 1962

 

இந்தப் பாடலில் கவியரசு பின்னியிருப்பார். அடக்கம் என்பது பெண்ணுருவம்; அதை அறிந்தால் மறையும் என்னுருவம் … என்பார்.

அதற்கு அவள் அது நடக்கவில்லை என்பாள்! இதுதான் நிறை அழிதல்.

 

இது ஏன் என்று கேட்டால், என் உள்ளம் கவர் கள்வனின் வார்த்தை விளையாட்டு என்பாள்! வார்த்தை என்பது உணர்வுகளின் வெளிபாடு!

 

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை. – 1258; - நிறை அழிதல்

 

பணி மொழி = இறைஞ்சும் சொல், கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் சொல்; கள்வன் பன்மாயப் பணிமொழி அன்றோ = என் உள்ளம் கவர் கள்வனின் பல மாய வித்தைகளைப் புரியும் அந்த இனிமையான, கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் சொல் அன்றோ; நம் பெண்மை உடைக்கும் படை = நம் பெண்மையில் பரம்பரையாக உள்ள நாணத்தைத் தகர்க்கும் படை.

 

என் உள்ளம் கவர் கள்வனின், பல மாய வித்தைகளைப் புரியும் அந்த இனிமையான, கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் சொல் அன்றோ; நம் பெண்மை உடைக்கும் படை = நம் பெண்மையில் பரம்பரையாக உள்ள நாணத்தைத் தகர்க்கும் படை.

 

நான்கு  விஷயத்துக்குத் தயக்கப்படவோ, வெட்கப்படவோ கூடாது. அவையாவன: பணம், உணவு, கல்வி, கலவி. மேலும் குறிப்பாக, பசிக்கும், பாரியாளிடமும் கூச்சம் நிச்சயமாகக் கூடாது என்று பார்த்துள்ளோம். காண்க 18/04/2021. மேற்சொன்ன நான்குக்கும் நிறை பார்த்தால் வேலைக்கு ஆகாது.

 

சரி இது இருக்கட்டும், நாம் குறளுக்கு வருவோம்.

 

திரும்பி வந்த அவரிடம் குறைகளைச் சொல்லி சண்டை போடலாம் என்றுதான் சென்றேன். ஆனால், ஆனால் … என்ன செய்தேன் நான்? புல்லினேன் என் கிறாள். அஃதாவது, அவரைத் தழுவினேன் என்கிறாள்!

 

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு. – 1259; - நிறை அழிதல்

 

புலப்பல் எனச்சென்றேன் = திரும்பிவந்த அவருடன் சண்டை போடலாம் என்றுதான் சென்றேன்; நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு = ஆனால், அன்புடைய நெஞ்சங்கள் தாம் கலப்பன கண்டு; புல்லினேன் = வேறு வழியில்லாமல் அவரைத் தழுவினேன். என்னே என் நிறை! என்னே அது அழிதல்!

 

திரும்பிவந்த அவருடன் சண்டை போடலாம் என்றுதான் சென்றேன். ஆனால், அன்புடைய நெஞ்சங்கள் தாம் கலப்பன கண்டு, வேறு வழியில்லாமல் அவரைத் தழுவினேன். என்னே என் நிறை! என்னே அது அழிதல்!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.



ree

 

 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page