top of page
Search

மடிஉளாள் மாமுகடி ... 617

13/03/2023 (739)

ஊக்கம் முக்கியம் என்றார் ஊக்கமுடைமை (60ஆவது) அதிகாரத்தில். ஊக்கம் மட்டும் இருந்தால் போதாது தம்பி, சோம்பலையும் தவிர்த்தல் அவசியம் என்றார் மடியின்மையில் (61 ஆவது). அது மட்டும் போதுமா என்றால், அது எப்படி? அடுத்து செய்ய வேண்டியது ‘முயற்சி’. இது முக்கியம் என்பதனால் ஆள்வினை உடைமை (62ஆவது) அதிகாரம்.


ஆள்வினை என்பது வினையை ஆள்வது. வினையை ஆளும் திறமைதான் ஆள்வினையுடைமை. இது காரியம். இதற்கு காரணமாக இருப்பது முயற்சி. அதைக் குறித்துதான் சொல்லத் தொடங்குகிறார்.


இந்த அதிகாரத்திலும் சோம்பலைக் குறித்து ஒரு குறளில் மேலும் தெளிவு படுத்துகிறார். முயற்சி செய்யும் போது மலைபோல தடைகள் வரலாம்.


அப்படி வந்தாலும் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக சோம்பலைத்தவிர் என்று மீண்டும் நினைவு படுத்துகிறார். தாயுள்ளம் கொண்டவர் நம் பேராசான்.


சரி, நாம் குறளைப் பார்ப்போம்.


மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்.” --- குறள் 617; அதிகாரம் – ஆள்வினை உடைமை


மாமுகடி மடி உளாள் என்ப = கரிய மூதேவி என்பவள் சோம்பலில் இருக்கிறாள் என்பர்; தாமரையினாள் மடியிலான் தாள் உளாள் என்ப = சிவந்த இலக்குமி தேவி சோம்பலில்லாதவன் முயற்சியின்கண் இருப்பாள் என்பர்.


மூதேவி என்பவள் சோம்பலில் இருக்கிறாள் என்பர்; இலக்குமி தேவி சோம்பலில்லாதவன் முயற்சியின்கண் இருப்பாள் என்பர்.


புலவர் மா. நன்னன் அவர்கள் தனது திருக்குறள் விளக்க உரையில் இந்தக் குறளை விளக்கும்போது வறுமையைக் கரியவளாகவும், செழிப்பை செய்யவளாகவும் (சிவந்தவளாகவும்) கொண்டு கூறல் தமிழ் இலக்கிய வழக்கேயாகும் என்கிறார்.

மூதேவி என்பவள் வறுமையின் குறியீடு; இலக்குமி தேவி என்பவள் செல்வத்தின் குறியீடு.


இந்தக் குறளுக்கு மேற்கண்ட பொருள்தான் பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.


மாற்றி யோசிப்போமா என்று தோன்றுகிறது. நாளை தொடரலாம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page