top of page
Search

மடிஉளாள் மாமுகடி ... 617 மறுபார்வை

14/03/2023 (740)

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்.” --- குறள் 617; அதிகாரம் – ஆள்வினை உடைமை


நாம் நேற்று சிந்தித்த இந்தக் குறளை வேறு மாதிரியும் சிந்திக்கலாம் என்று தோன்றுகிறது.


பெண்ணும் ஆணும் இயற்கை இணையர்கள். அதை சக்தியும் சிவனும், என்றும், யின் (Yin) யாங் (yang) என்றும், ஊக்கமும் ஆக்கமும் என்றும் சொல்கிறார்கள். இதன் உள்பொருள் (abstract) என்னவென்றால் காரணம் – காரியம்.


பொதுப்படச் சொன்னால் பெண் காரணமாக இருக்கிறாள் ஆண் காரியமாக இருக்கிறான். பெண், ஆண் என்பதெல்லாம் தன்மைகள்!


இந்த இயற்கை இணைகள் எல்லா காலத்திலும் முரணாக அமைந்துவிட்டால்? கொடுமைதான்! அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.அவ்வப்போது மாறலாம், திரியலாம். மாறிக்கொண்டே இருப்பதும் இயற்கை தான்!


ஆகையால், பெண், ஆண் தன்மைகளும் இரு வகையில் செயல்படலாம். அதாவது, சில போது இணங்கியும், சில போது விலகியும் செயல்படலாம்.


சரி என்ன செய்யனும்?


தடைகளை விழுங்கி நடைகளைப் போடனும்!

மீண்டும் நாம் அந்தக் குறளுக்கு வருவோம்.


கீழ்கண்டவாறு பிரிப்போம். இலக்கணத்தில் இதற்கும் வழி உண்டு! (தீவக அணி)


மடியிலான் மடி உளாள் மாமுகடி என்ப; மடியிலான் தாள் உளாள் தாமரையினாள் என்ப.


மடியிலான் மடி உளாள் மாமுகடி என்ப = பெரிய தடை அல்லது முட்டுக்கட்டைகளை, மடியில்லாதவன் அதாவது சோம்பலில்லாதவன் விழுங்கிவிடுவான் (மடக்கி விடுவான்);

மடியிலான் தாள் உளாள் தாமரையினாள் என்ப = மடியிலானின் காற் சுவடுகளில் வெளிப்படுவது நீரைத் துளைத்துக் கொண்டு வெளிவரும் தாமரையைப் போல அவனது ஆக்கங்கள்.


மடியில்லாதவனிடம் சோம்பல் மடங்கிக் கிடக்கும்; முயற்சி வெளிப்பட்டு நிற்கும்.


மேற்கண்ட இக்குறள் மடியிலானுக்கு வரைமுறை (definition) போலவும் எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page