top of page
Beautiful Nature

மறைப்பேன்மன் யானிஃதோ ... 1161, 1159, 20/02/2024

20/02/2024 (1081)

அன்பிற்கினியவர்களுக்கு:

பிரிவு ஆற்றாமை அதிகாரத்தைத் தொடர்ந்து படர் மெலிந்து இரங்கல் என்னும் அதிகாரம்.

 

இடரும் படரும்:

                                                                             

இடர் என்றால் துன்பம். இது இன்ன இடத்தில் இன்ன வகையில் என்று எடுத்துச் சொல்ல முடியும். ஒரு செயல் நிகழ்வதாலோ, அல்லது நிகழாமல் போவதாலோ இடர் வரலாம்.

 

படர் என்றாலும் துன்பம்தான். ஆனால், படர் நினைப்பதால் வருவது. மனத்துடன் தொடர்புடையது. படர் என்பது என்னவென்று விளக்க முடியாத் துன்பம். உடல் முழுக்கப் பரவித் துன்பத்தைத் தரும்.

 

“படரே உள்ளல் செலவும் ஆகும்” என்கிறார் தொல்காப்பியர் பெருமான். (பாடல் 823, தொல்காப்பியம், சொல்லதிகாரம், புலவர் வெற்றியழகனார் எளிய உரை), அஃதாவது, படர் என்ற உரிச்சொல்லுக்கு நினைத்தல், அதன் வழி செல்லுதல் என்று பொருள்படும்.

 

படர் துன்பத்திற்கு ஆகி வந்துள்ளது. “படர் மெலிந்து இரங்கல்” என்றால் அவனின் நினைப்பால், அவள் மெலிந்து, அந்தத் துன்பத்தை அவள் சொல்லுதல் என்று பொருள்.

படர் என்றால் பரவுவது. அதற்குத் தீர்வும் படர்தல்தான். அவன் அவள் மேல் படர்ந்தால் இந்தப் படர் பறந்தோடும்.

 

மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்னும் ஊரில் காளமேகப் பெருமாள் கோயில் உள்ளது. அந்தப் பெருமாளைக் குறித்து நம்மாழ்வார்ப் பெருமான் பல பாடல்களை இயற்றியுள்ளார். (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருவாய்மொழி, பத்தாம் பத்து).

 

இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி

சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர

படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்

இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர்! வம்மினே.

 

எங்கள் துன்பங்களைத் தீர்க்க வேண்டும் என்று திருமோகூரில் நின்று அருளும் சுடர் கொள் சோதியை, எந்நாளும் தங்கள் மனத்தால் நினைந்து கொண்டிருக்கும், தேவர்களும், முனிவர்களும் தொடர, அந்தப் பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருமோகூர் பெருமானை  நாமும் நம் துன்பங்கள் கெட அவன் அடிகளைப் பரவுவோம் என்கிறார் நம்மாழ்வார் பெருமான்.

 

தமிழ்ச் சொல்களை வைத்துக் கொண்டு என்ன அழகாகப் பாடல்களை அருளிச் செய்துள்ளனர்.  இது கவனிக்கத் தக்கது. இது நிற்க.

 

சரி, நாம் குறளுக்குள் நுழைவோம்.

 

அவரின் பிரிவால் நான்படும் துன்பங்களை இதோ இப்போதே மறைக்கதான் முயல்கிறேன். ஆனால், நான் மறைக்க, மறைக்க அது ஊற்று நீர் போல மேலெழுந்து வருகின்றதே. என்ன செய்வேன்?

 

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும். – 1161; - படர் மெலிந்து இரங்கல்

 

நோயை யான் இஃதோ மறைப்பேன் = இந்தக் காம நோயை இதோ இப்போதே மறைக்க முயல்கிறேன்; இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் = ஆனால், அஃது இறைப்பவர்களுக்கு ஊற்று நீர் போலப் பொத்துக் கொண்டு வருகிறதே?; மன் – ஒழியிசை – காண்க 09/09/2023.

 

இந்தக் காம நோயை இதோ இப்போதே மறைக்க முயல்கிறேன்; ஆனால், அஃது இறைப்பவர்களுக்கு ஊற்று நீர் போலப் பொத்துக் கொண்டு வருகிறதே? ஊற்று நீர் எடுக்க எடுக்க வெளிவந்து கொண்டிருக்கும். ஆனால், இந்தக் காம நோய் அடக்க அடக்க வெளி வருகிறதே என்கிறாள்.

 

இந்த முரண்களைப் பிரிவு ஆற்றாமையிலும் சொல்லியிருந்தார். நெருங்க நெருங்கச் சுடுவது நெருப்பு; விலக விலகச் சுடுவது காம நோய் என்றார். காண்க 19/02/2024. மீள்வார்வைக்காக:

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடின்சுடல் ஆற்றுமோ தீ. – 1159; - பிரிவு ஆற்றாமை

 

மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree

 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page