top of page
Search

வேண்டற்க ... 176, 177

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

இல்லறத்தான் வெஃகலாம் என்றும் சொல்கிறார்! என்ன இப்படியும் சொல்கிறாரா நம் பெருந்தகை என்று கேட்பீர்களானால் ஆம் என்பதுதான் பதில்!


இல்லறத்தானின் ஆகக் கடைசி எது என்றால் துறவறத்தின் நுழைவாயில். துறவறத்தின் முக்கியப் பண்பு எது என்றால் அனைத்து உயிர்களின் மேலும் அன்பு. அஃதே அருள்.


(தொடர்புடையார் மாட்டு செய்வது அன்பு; அனைத்து உயிர்களின் மேல் செய்வது அருள்.)


அந்த அருளை நோக்கியப் பாதைதான் இல்லறம். அஃதாவது, இல்லறத்தான் வெஃக வேண்டியது அருளாளர்கள் சென்று கொண்டிருக்கும் அருள் என்னும் பாதை. அவர்களின் பாதையை வெஃகுவதில் தவறில்லை.


இல்லறத்தான் அந்த அருளென்னும் பாதையை வெஃக வேண்டும் என்னும்போது பிறரின் பொருளை வெஃகுவேன் என்றால் போக வேண்டிய பாதை மாறி படுகுழிக்குச் செல்கிறது என்று பொருள் என்கிறார்.


அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும். - 176; வெஃகாமை


அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் = அருளென்னும் அருளாளர்களின் பாதையை, அற வழியை விரும்பி அதன் வழி இருக்க வேண்டும் என்பவர்கள்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் = பிறரின் பொருளை விரும்பினால் பொல்லாதவைகள் தங்களைச் சூழக் கெடுவார்கள்.


அருளென்னும் அருளாளர்களின் பாதையை, அற வழியை விரும்பி அதன் வழி இருக்க வேண்டும் என்பவர்கள் பிறரின் பொருளை விரும்பினால் பொல்லாதவைகள் தங்களைச் சூழக் கெடுவார்கள். பாதை மாறுவார்கள் என்று எச்சரிக்கிறார்.


மேலும் தொடர்கிறார். அஃதாவது, பிறரின் பொருளை வௌவுவதால் (கவருவதால்) வரும் பயனை விரும்பாதீர்கள். அதன் பயன் பெருகும்போது, அனுபவிக்கும் போது சிறப்பு சேர்பதில்லை என்கிறார்.


ஒரு பொருளைக் களவாடிவிட்டோம். அந்தப் பொருளை அனுபவிக்கும் போது மகிழ்ச்சியைத்தருமா என்றால் நிச்சயமாகத் தராது. ஏன் எனில், எப்போது நமது குட்டு வெளிப்படுமோ என்ற அச்ச உணர்வு வந்து அந்தப் பொருளால் பெற வேண்டிய நல்ல பயனை அனுபவிக்க முடியாமல் போகும்.


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.” --- குறள் 177; அதிகாரம் – வெஃகாமை


வெஃகியாம் ஆக்கம் விளைவயின் = பிறரின் பொருளை பேராசை கொண்டு கவர்ந்துவிட்டதால் ஏதாவது பயன் உண்டாகுமேயானால்; மாண்டற்கு அரிதாம் = அதனால் கிடைக்கும் அனுபவம் சிறப்பாக இருப்பதற்கு அரிது. அஃதாவது சிறப்பாக இருக்காது; வேண்டற்க = (எனவே வெஃகுதலை) விரும்பாது ஒழிக.


பிறரின் பொருளை பேராசை கொண்டு கவர்ந்துவிட்டதால் ஏதாவது பயன் உண்டாகுமேயானால் அதனால் கிடைக்கும் அனுபவம் சிறப்பாக இருப்பதற்கு அரிது. எனவே வெஃகுதலை விரும்பாது ஒழிக.


அரிது என்ற சொல் இங்கே இன்மை என்ற பொருளில் ஆளப்படுகிறது.


விளைவயின் = விளை + வயின்; வயின் = இடம். விளைவயின் என்பது எதிர்கால வினைத்தொகை நிலைத் தொடர் மொழி.


இந்த அதிகாரத்திற்கு வெஃகாமை என்று பெயரிட்டார். இருப்பினும், வெஃகுவதை விலக்கியே ஆக வேண்டும் பொருட்டு, முதல் ஏழு பாடல்கள் மூலம் வெஃகுவதால் வரும் குற்றங்களை நம் மனத்தில் பதியுமாறு விரித்துச் சொன்னார்.


அடுத்து வரும் இரண்டு பாடல்களால் வெஃகாமையினால் வரும் சிறப்புகளைக் கூறப் போகிறார்.


நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page