top of page
Search

வினைபகை என்றிரண்டின் ... 674, 673,

10/05/2023 (797)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நேற்று ஒரு கேள்வியோடு நிறுத்தியிருந்தோம். குறள் 67ā3 இல் வினை என்ற சொல்லுக்குப் “போர்” என்று பொருள் எடுத்திருந்தோம்.

மீள்பார்வைக்காக:

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.” --- குறள் 673; அதிகாரம் – வினை செயல்வகை

பகையை அழிக்க இயலும் இடத்தில் எல்லாம் போர்தான் சரியான வழி; அவ்வாறு இயலா இடங்களில், ஏனைய மூன்று வழிமுறைகளில் எது செல்லுமோ அதைக் கொண்டு அப்பகையைத் தவிர்க்க.


இந்த உரை, பரிமேலழகப் பெருமானின் உரையைத் தழுவியது.


மணக்குடவப் பெருமான் வினை என்பதற்குச் செயல் என்றே பொருள் எடுத்து உரை கண்டிருக்கிறார். அப்பெருமானாரின் உரை வருமாறு:


“இயலும் இடம் எல்லாம் வினை செய்தல் நன்று; இயலாத காலத்து அதனை நினைத்திருந்து இயலும் இடம் பார்த்து செய்க. இது வினை செய்து முடிந்ததில்லையென்று இகழாது பின்பு காலம் பார்த்து செய்கவென்றது.”

மணக்குடவப் பெருமான், காலமும் இடமும் அறிந்து செய்க என்று சொல்கிறார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.


இருப்பினும், காலமறிதல், இடனறிதல் என்ற இரு அதிகாரங்களில் (49ஆவது மற்றும் 50 ஆவது) காலத்தையும், இடத்தையும் மிக விரிவாகவே நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் நம் பேராசான். அந்தக் கருத்தையே மீண்டும் சொல்வாரா என்பது கேள்வியாக இருந்திருக்கலாம் பரிமேலழகப் பெருமானுக்கு.


அது மட்டுமல்ல, நம் வள்ளுவப் பெருந்தகை, “ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச்செயல்” என்றுதான் சொல்லியிருக்கிறார். இங்கே காலம், இடம் குறித்த குறிப்புகள் இல்லை. ஒரு செயலை முடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா எப்படிப் போனால் தப்பிக்கலாம் என்று பார்த்து அவ்வாறு செய்யுங்கள் என்பதுபோலத்தான் பொருள் வருகிறது.


நாம் சற்று சிந்திப்போமானால், இங்கு சொல்லப்படும் வினைகள் (செயல்கள்) சற்று தீவிரமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஒன்று முடிக்க வேண்டும்; அல்லது தப்பிக்க வேண்டும்!


ஏன் என்றால், இந்தக் குறளை அடுத்துவரும் குறளில் ஒரு குறிப்பினைக் காட்டுகிறார் நம் பேராசான்.


வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.” --- குறள் 674; அதிகாரம் – வினை செயல்வகை


எச்சம் = மீதம்; தெறும் = அழிக்கும்;

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் = செய்யத் தொடங்கியச் செயல், களையத் தொடங்கியப் பகை ஆகிய இரண்டையும் முற்றும் முடிக்காமல் மீதம் வைப்பதை ஆராயும்போது; தீயெச்சம் போலத் தெறும் = தீயை அணைக்கும்போது முற்றாக அணைக்காமல், கொஞ்சம் மீதம் வைத்தால் எப்படி அது நம்மை அழித்துவிடுமோ அதுபோல.


செய்யத் தொடங்கியச் செயல், களையத் தொடங்கியப் பகை ஆகிய இரண்டையும் முற்றும் முடிக்காமல் மீதம் வைப்பதை ஆராயும்போது, அது எப்படி இருக்கும் என்றால், தீயை அணைக்கும்போது முற்றாக அணைக்காமல் கொஞ்சம் மீதம் வைத்தால் எப்படி அது நம்மை அழித்துவிடுமோ அதுபோல.


இச்சிறு தீ, இனிமேல், என்ன செய்யும் என்று நினைத்து விட்டுவிடக்கூடாது.

அதாவது, அந்த எச்சம் எழுந்து நம்மை அழிக்கும் என்பது தெளிவு.


எனவே, இந்த அதிகாரத்தில் கூறப்படும் வினைகள் என்பது சற்று தீவிரமான வினைகள் என்றே நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.


வினையையும் பகையையும் ஒரே தட்டில் வைத்து அந்தக் குறிப்பினைக் காட்டியிருக்கிறார். அடுத்து வரும் குறள்களிலும் அவ்வாறுதான் உள்ளதா?

வரும் நாட்களில் பார்ப்போம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page