top of page
Search

வேலோடு நின்றான் ... 552, 43

08/01/2023 (675)

அலை மேற்கொண்டு அல்லவை செய்யும் தலைமை கொலை மேற்கொண்டு செயல்படுபவர்களைவிட கொடியவர்கள் என்றார் செங்கோன்மை அதிகாரத்தின் முதல் பாடலில் (குறள் 551).


காட்சி 1:

இரவு நேரம். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. தனியே ஒருவன் சென்று கொண்டிருக்கிறான். பெரிய ஆலமரம் காற்றில் ஓவென்று அசைந்து கொண்டு இருக்கிறது. தெரு விளக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக மினுக், மினுக்கென்று இறுதி மூச்சினை விடுவது போல மினுக்கிக் கொண்டுள்ளது.


அப்போது, ஆலமரத்தின் பின்னிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு அவனை ‘நில்’ என்கிறது. அந்த உருவத்தின் கையில் பளபளக்கும் ஒரு கூரிய கத்தி.


“சத்தம் போடாதே. சத்தம் போட்டால் அவ்வளவுதான். உன் உயிர் என் கையில். உள்ளதையெல்லாம் எடு வெளியே. கொடு எனக்கு. கொடுத்து விட்டால் நீ உயிரோடு போகலாம்” என்று மிரட்டிகிறது.


அவனுக்கு வேறு வழியில்லை. அவன் கைப்பொருள்களையெல்லாம் எடுத்துக் கொடுக்கிறான். அந்த உருவம் மறைகிறது.


அவன் தன் தலைவிதியை நொந்துகொண்டு தொடர்கிறான்!


காட்சி 2:

ஒர் அரசு ஆணை வெளிவருகிறது. நாளை முதல், அனைவரும் எதற்காகச் செலவு செய்தாலும் அந்தச் செலவில் நான்கில் ஒரு பங்கினை அரசுக்கு அளித்துவிட வேண்டும். மீறினால் தண்டனை அல்லது சிறை!


நம்மாளு: ஐயா, எல்லாவற்றிற்குமா? நாங்களோ அன்றாடம் தொழில் செய்து வருவதைக் கொண்டு வயிற்றைக் கழுவுகிறோம். எங்களுக்கு வரவே குறைவு. அதில் எப்படி ஐயா ஒரு பகுதியை உங்களுக்கு...


அரசு: வாயைத் திறக்காதே! அரசின் முன் அனைவரும் சமம். அரசு அனைவருக்கும் பொது. நீ ஏன் அரசுக்குத் தருவதாக நினைக்கிறாய்? பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது என்று நினைத்துக் கொள். விற்பவர்கள் அரசுக்கு சேர வேண்டியதை அவர்கள் செலுத்தி விடுவார்கள். உனக்கு அந்தச் சிரமத்தை அரசு எப்போதும் கொடுக்காது! ஒரு நல்ல குடி மகனாக நடந்து கொள்! நாளைய உலகம் உன் கையில்!


வள்ளுவப் பெருந்தகை இந்த இரு காட்சிகளையும் கண்டிருப்பார் போலும். எடுத்தார் எழுத்தாணியை! தொடுத்தார் ஒரு குறளை!


வேலோடு நின்றான் இடு என்றது போலும்

கோலோடு நின்றான் இரவு.” --- குறள் 552; அதிகாரம் – செங்கோன்மை


கோலோடு நின்றான் இரவு = கொடுமையாக வரிகளை விதிக்கும் அரசு (எது போன்றது என்றால்)

வேலோடு நின்றான் இடு என்றது போலும் = ஆயுத முனையில் ஒரு கொள்ளையன் கொடு பொருளை என்று மிரட்டுவது போல இருக்கிறது.


கொடுமையாக வரிகளை விதிக்கும் அரசு, எது போன்றது என்றால்,

கத்தி முனையில் ஒரு கொள்ளையன் ‘கொடு பொருளை’ என்று மிரட்டுவது போல இருக்கிறது.


பழங்காலப் பெருமக்கள் வரிகளுக்கு எதிரானவர்களா? இல்லை.

வரும் வருவாயில் ஆறில் ஒரு பங்கு வரி (16%) என்பது அந்தக் காலத்தில் இருந்தது என்பதை பலர் அறிஞர் பெருமக்கள் எடுத்து வைக்கிறார்கள்.


வரி தேவைதான், அது மக்களை நசுக்கக் கூடாது என்கிறார்கள். நாம் முன்பு ஒரு குறளைப் பார்த்தோம். காண்க 02/03/2021.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.” --- குறள் 43; அதிகாரம் - இல்வாழ்க்கை

தென்புலத்தார் = தென்திசையில் உறைவோர்; தெய்வம் =வழிபடு கடவுள்; விருந்து = விருந்தினர், அறிமுகமிலாதவர் விருந்தினராவார்; ஒக்கல் = சுற்றம், இயற்கை உறவினால் அமைந்த தொடர்புடையவர்கள்; தான் = நாம தான்; என்று = என; ஐம்புலத்தாறு = ஐவருக்கும் நல்வழியாக; ஓம்பல் =அமைதல், பேணுதல், போற்றுதல்; தலை = சிறப்பானது


இந்தக் குறளுக்கு, பரிமேலழகப் பெருமான் உரை எழுதும்போது, வரும் வருவாயில் இந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று சொன்னவர், மேலும் சொல்கிறார் “அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று” என்கிறார்.


அதாவது, ஐந்தும் மனம் ஒப்பி செய்ய வேண்டியது. அதனால், நம் பேராசான் அழுத்திச் சொல்கிறார். அரசிற்கு செய்ய வேண்டியதை நாம் கொடுக்காவிட்டாலும் அரசு எடுத்துக் கொள்ளும் என்பதால் அதைத் தனியாகச் சொல்லவில்லை என்கிறார்.


வரியென்பது “ஆறில் ஒரு பங்கு” என்பதைத் தெரிவிக்கிறார். இதை, சோழர்கள், குப்தர்கள் போன்றோர் செயல் படுத்தினார்கள் என்பதை படித்ததாக ஒரு கவனம்.


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page