23/04/2023 (780)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வினைத்தூய்மை அதிகாரத்தின் முதல் பாடலில், அதனால் வரும் சிறப்பு கூறினார். அதாவது, நல்லச் செயல்களைத் துணிந்து செய்வது என்பது வேண்டியன எல்லாம் தரும் என்றார். காண்க 19/04/2023 (776). மீள்பார்வைக்காக:
“துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.” --- குறள் 651; அதிகாரம் – வினைத்தூய்மை
சுற்றம், நட்பு, ஏனையத் துணைகள் உயர்வுக்கு வழி வகுக்கும்; ஆனால், அந்தத் துணைகளையும் பெற நாம் செயலைத் துவங்க வேண்டும். எனவே, நல்லச் செயல்களைத் துணிந்து செய்வது என்பது வேண்டியன எல்லாம் தரும்.
இந்தப் பாடலைத் தொடர்ந்து எந்த எந்த வினைகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பதை ஐந்து பாடல்கள் மூலம் சொல்லிக் கொண்டுவருகிறார்.
குறள் 652 இல், புகழொடு நல்லப் பயன்களைத் தராத செயல்களைத் தவிர்த்தல் வேண்டும் என்றார். காண்க 20/04/2023 (777).
குறள் 653 இல், பெருமையைக் குலைக்கும் செயல்களைத் தவிர்த்தல் வேண்டும் என்றார். காண்க 22/04/2023 (779).
நாம் ஒளவையார் பெருந்தகை இயற்றிய மூதுரை என்னும் முத்தான முப்பது பாடல்களில் இருந்து நான்காவது பாடலைக் காண்போம். இந்தப் பாடல் நமக்கெல்லாம் தெரிந்தப் பாடல்தான்.
அதாவது, பாலை நன்கு தீயிலிட்டுக் காய்ச்சினாலும் அதனின் சுவை குறையாது; என்னதான் சிலர் ஒட்டி உறவாடினாலும் அவர்கள் மனதில் நட்பு இல்லையேல் ஒருகாலும் அவர்கள் நண்பர்கள் ஆக மாட்டார்கள்; கடலிலே கிடைக்கும் சங்கைச் சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும். அது போல, கெட்டாலும் மேன் மக்கள் ஒரு நாளும் கீழானச் செயல்களைச் செய்யமாட்டார்கள் என் கிறார் நம் ஒளவைப் பெருந்தகை.
“அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்;
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.” --- பாடல் 4; மூதுரை
துன்பம் வரினும் தன் நிலைக்கு மாறான, அறமற்ற இழிவு தரும் செயல்களைச் செய்யாமல் இருப்பது, வினைத்தூய்மை என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.” --- குறள் 654; அதிகாரம் – வினைத்தூய்மை
நடுக்கற்ற காட்சியவர் = தெளிவான சிந்தனை உடையவர்கள்;
இடுக்கண்படினும் = தாம் துன்பத்திலே உழன்று கொண்டிருந்தாலும்; இளிவந்த = அதனைக் களையும் விதமாக தாழ்வான, அறமற்றச் செயல்களைச் செய்யார்.
தெளிவானச் சிந்தனை உடையவர்கள், தாம் துன்பத்திலே உழன்று கொண்டிருந்தாலும், அதனைக் களையும் விதமாக தாழ்வான, அறமற்றச் செயல்களைச் செய்யார்.
நடுக்கற்ற காட்சி என்பது மனத்திண்மையைக் குறிக்கும். ஆங்கிலத்தில், எல்லோருக்கும் ஒரு Breaking point (மனம் உடைந்து போகும் நேரம்) இருக்கும் என்பர். அதாவது, “தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன” என்று மனம் பேதலிக்குமாம். அவ்வாறு, பேதலிக்காமல் ஒரு நிலையில் இருந்து பார்ப்பதுதான் நடுக்கற்ற காட்சி.
நடுக்கற்ற காட்சி வேண்டும்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント