top of page
Search

ஈட்டம் இவறி இசைவேண்டா ... 1003, 432, 1002, 570, 19/05/2024

Writer: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

19/05/2024 (1170)

அன்பிற்கினியவர்களுக்கு:

இவறல் என்றால் கருமித்தனம் என்று நமக்குத் தெரியும். காண்க 02/04/2021. மீள்பார்வைக்காக:

 

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு. - 432; - குற்றங்கடிதல்

 

இவறல் = கருமித்தனம், யார் கன்ணுக்கும் தெரியாமல் பதுக்கி வைத்தல்; மாண்பு இறந்த மானம் = பெருமையில்லா மானம், சும்மாவே பந்தா பண்ணுவதும்; மாணா உவகை = அளவிற்கு அதிகமான கொண்டாட்டம்; ஏதம் = குற்றம், கேடு, துன்பம்.

மாணா = மாண் என்பதற்கு எதிர் (opposite). ‘மாணாமை’ என்றால் மாண் என்ற பண்பு அமையாமை, ஒரு நிலையில் நில்லாமை, மடமை என்று பார்த்துள்ளோம். காண்க 14/03/2022.

 

மாணாப் பிறப்பு என்றால் நிறைதலை அடையாப் பேய்ப் பிறப்பு என்று பொருள் காண்கிறார் பரிமேலழகர் பெருமான்

 

சரி, நாம் நன்றியில் செல்வத்திற்கு வருவோம்.

 

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு. – 1002; - நன்றியில் செல்வம்

 

பொருளானாம் எல்லாம் = இந்த உலகில் செல்வம்தான் முக்கியம்; என்று ஈயாது = என்று ஒருவர்க்கும் ஒரு உதவியும் செய்யாது; இவறும் = கஞ்சத்தனம்தான் தம்மைக் காப்பாற்றும் என்ற; மருளானாம் = அந்த இருண்ட மயக்கத்தில் இருப்பவர்களின் பிறப்பு; மாணாப் பிறப்பு = இழி பிறப்பு.

 

இந்த உலகில் செல்வம்தான் முக்கியம் என்று ஒருவர்க்கும் ஒரு உதவியும் செய்யாது, கஞ்சத்தனம்தான் தம்மைக் காப்பாற்றும் என்ற அந்த இருண்ட மயக்கத்தில் இருப்பவர்களின் பிறப்பு இழி பிறப்பு.

 

இந்த நிலத்திற்குப் பாரம் என்ற சொற்றொடரை இரண்டு குறள்களில் பயன்படுத்தியுள்ளார். ஒன்றினை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 28/01/2023. மீள்பார்வைக்காக:

 

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை. - 570;  வெருவந்த செய்யாமை

 

அஃதாவது கடுங்கோலன், கல்லான் இரண்டுமே பூமிக்குப் பாரம் (waste pieces). இரண்டும் இணைந்தால் அது கொஞ்சம் அதிக பாரம்தான் (over weight)!

 

இது நிற்க. நாம் நன்றியில் செல்வத்தினை மேலும் எப்படித் தாக்குகிறார் என்று பார்ப்போம்.

 

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை. – 1003; - நன்றியில் செல்வம்

 

ஆடவர் = ஆடிக் கொண்டு இருப்பவர்கள்;

ஈட்டம் = எங்கேயாவது எப்படியாவது பொருள் கிடைக்காதா என்று பொருளிற்காக எதனையும் செய்து பொருள் ஈட்டுபவர்கள்; இவறி = பேராசையால் பொருளைப் பதுக்குபவர்கள்; இசை வேண்டா ஆடவர் தோற்றம் = யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தூற்றிக் கொள்ளட்டும் எனக்கு என் இருப்புதான் முக்கியம் என்று ஆடிக் கொண்டு இருப்பவர்கள்;  நிலக்குப் பொறை = இந்த நிலத்திற்குப் பாரம்.

 

எங்கேயாவது எப்படியாவது பொருள் கிடைக்காதா என்று பொருளிற்காக எதனையும் செய்து பொருள் ஈட்டுபவர்கள், பேராசையால் பொருளைப் பதுக்குபவர்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தூற்றிக் கொள்ளட்டும், எனக்கு என் இருப்புதான் முக்கியம் என்று ஆடிக் கொண்டு இருப்பவர்கள் இந்த நிலத்திற்குப் பாரம்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page