உரம் ஒருவற்கு உடைதம் வலி ... 600, 473
03/11/2022 (610)
ஆசிரியர்: தம்பி, வினை வலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி ஆகிய நான்கு வலிமைகளில் எது மிக முக்கியம்? உங்க கருத்து என்ன?
(நம்மாளு மைண்ட் வாய்ஸ்: ... இதற்குத்தான் நாம எப்பவும் முந்திக்கிட்டு கேள்வி கேட்கனும். இன்றைக்கு அவ்வளவுதான்.... கொஞ்சம் மௌனமாக இருந்தால் அவரே தொடர்ந்துவிடுவார்! )
நம்மாளு: “ங்கே...”
ஆசிரியர்: ஒருவனின் வெற்றிக்கு இரு பெரும் காரணிகள் இருக்குமாம். ஒன்று அவனின் உள்ளார்ந்த திறமை (innate talent), மற்றொன்று அந்த உள்ளார்ந்த திறமையை மேலும் அதிகப்படுத்தி, வெளிப்படுத்த உதவும் சுற்றுப்புறச் சூழல் (infrastructural boost).
உள்ளார்ந்த திறமைகள் வளர, வெளிப்பட இரண்டு காரணிகள் இருக்கு. ஒன்று: பயிற்சி; இரண்டு: துணிச்சல். இவை அகக்காரணிகள். இவைகளை உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரியச் செய்யவேண்டும். இதற்கு அடிப்படை என்னவென்று கேட்டால் அதுதான் ஊக்கம் அல்லது மனத்திண்மை (mental toughness). இதுதான் ரொம்ப முக்கியம். இது இருந்தால் அனைத்தும் வந்து சேரும்.
நாம் முன்பு ‘ஊக்கமுடைமை’ எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 (535).
“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு.” --- குறள் 600; அதிகாரம் – ஊக்கமுடைமை
உரம் = அறிவாற்றல்; உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை = அறிவாற்றலுக்கு அடிப்படை ஊக்க மிகுதியே; அஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு = அவ்வாறு இல்லாமல் இருந்தால் அவர்கள் மரமும் அல்ல, மக்களும் அல்ல.
“சுற்றுப்புறச்சூழல்” என்பது ஒரு புறக்காரணிதான். இது எவ்வளவுதான் அபரிமிதமாக இருந்தாலும் உள்ளே சரக்கு இல்லையென்றால் எல்லாம் வீணாகிவிடும்.
அன்பினாலும், அவர்களால் செய்ய இயலாதவைகளை, தம் குழந்தைகள் மேல் திணித்து இதைச் செய், அதைச் செய், உன்னால் முடியும் என்று பலவகையில் தூக்கி, தூக்கி விடுவார்கள் சுற்றி உள்ளவர்கள். இது ஒரு வகை.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று இயற்கை.
குருவிகள் குழி பறிப்பதில்லை. குழி பறிப்பதுகள் உயரப் பறப்பதும் இல்லை!
மற்றொரு வகை இருக்கு. மனசுக்குள்ளே, தான் மட்டும் தான் மகாராஜா, அதாங்க, அறிவாளின்னு நினைக்கும். எனக்குத் தெரியாதது எதுவும் இந்த உலகத்தில் கிடையாதுன்னு இருக்கும். சுண்ணாம்பு அடிக்க சுத்தியலை எடுத்து சுத்திட்டு இருக்கும்.
இதுவும் சரி கிடையாதாம். நான் சொல்லலைங்க நம்ம பேராசான் தான் சொல்கிறார்.
“உடைதம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக் கண் முறிந்தார் பலர்.” --- குறள் 473; அதிகாரம் – வலியறிதல்
தம் உடை வலி அறியார் = தனது வலிமையை சரியாக உணராதவர்கள்;
தம் வலி உடை அறியார் = அவர்களிடம் இருக்கும் வலிமையின் அளவை உணர்ந்து கொள்ளாத பிறர்;
ஊக்கத்தின் ஊக்கி = உந்துதலால் முனைந்து தகுதிக்கு மீறியச் செயலில் ஈடுபடுவதால் / ஈடுபட வைப்பதால்
இடைக் கண் முறிந்தார் பலர் = பாதியிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர்.
உன் கால்களை நம்பு. அப்போது, உன்னை நம்பும் உலகம். அப்போதுதான் அந்த துணைவலி பெருந்துணையாகும். அப்புறம் என்ன வெற்றிதான்!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
