தேரான் ... 508, 510
06/12/2022 (642)
சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டால் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்குமாம். அதாவது, அந்த விளைவுகள் தலைமுறை, தலைமுறைகளுக்கும் இருக்குமாம்.
நம்ம பேராசான், அதைப் பற்றித்தான் பத்து பாடல்களை இந்த ‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தில் வைத்துள்ளார்.
குறிப்பாக, இரண்டு குறள்களில், நேரடியாகவே “தீரா இடும்பை தரும்” என்று சொல்கிறார்.
அதாவது, முடிவில்லாத தீங்கினை அளிக்கும்; இனத்தையே அழிக்கும்; அதாவது, அதுவரை இருந்த கோட்பாடுகள் (value systems) தரைமட்டமாக்கப்படும் என்கிறார்.
அந்த இரண்டு என்ன?
1. ஆராயமல் ஒருவனை பணிக்கு அமர்த்துவது மற்றும் அவனை மிகவும் நம்புவது;
2. ஆராய்ந்து ஒருவனை பணிக்கு அமர்த்தியபின் அவனைப்பற்றி சந்தேகப்படுவது.
எதனை ஆராய வேண்டும்?
ஒருவன், அந்த தலைமை கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு மாறுபாடு இல்லாதவனாக இருக்கிறானா என்பதை ஆராய வேண்டும்.
மாறுபாடு கொண்டிருக்கும் ‘பிறனை’ வேலைக்கு எடுக்கக்கூடாது. அருகிலும் வைத்துக் கொள்ளக் கூடாது.
அப்படி எடுத்தால் என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை விதைப்பார்கள். அந்த நிறுவனத்தையே சிதைப்பார்கள்.
துரியோதனனுக்கு ஒரு சகுனி; எல்லாம் வல்ல கர்த்தர் பெருமானுக்கு ஒரு யூதாஸ்; வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் ...
குறளுக்கு வருவோம்.
“தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பைத் தரும்.” --- குறள் 508; அதிகாரம் – தெரிந்து தெளிதல்
‘பிறனைத் தேரான் தெளிந்தான்’ என்றால் மாற்று கருத்துக் கொண்டவனா என்று நன்கு ஆராயாமல் துணைக்கு வைத்துக் கொள்வது.
வழிமுறை = தலைமுறை; தீரா இடும்பைத் தரும் = முடிவில்லாத துன்பம் தரும்.
மாற்று கருத்துக் கொண்டவனா என்று நன்கு ஆராயாமல் துணைக்கு வைத்துக் கொள்வது, பல தலைமுறைகளுக்கும் முடிவில்லாத துன்பம் தரும்.
சரி, ஒருத்தனை ஆராய்ந்து துணைக்கு வைத்துக்கொண்டாகிவிட்டது. பிறகு அவன் மீது அவநம்பிக்கை வைத்து அடிக்கடி அவனை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அந்த அவசியமற்ற சந்தேகங்களே அவனை பிறழவைக்கும். மாற்றானாக உருவாக்கும்.
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.” --- குறள் 510; அதிகாரம் – தெரிந்து தெளிதல்
தேரான் தெளிவு = ஆராயமல் வைத்துக் கொண்டவனை நம்புவது; தெளிந்தான் கண் ஐயுறவு = நன்றாக ஆராய்ந்து தெளிந்தபின் அவன்மீது தேவையில்லாமல் சந்தேகப்படுவது; தீரா இடும்பைத் தரும் = முடிவில்லாத துன்பம் தரும்.
ஆராயமல் வைத்துக் கொண்டவனை நம்புவது; நன்றாக ஆராய்ந்து தெளிந்தபின் அவன்மீது தேவையில்லாமல் சந்தேகப்படுவது; இரண்டும் முடிவில்லாத துன்பம் தரும்.
ஒருத்தரை வேலைக்கு வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான வேலை இல்லை போல!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
