top of page
Search

முறைகோடி ... 559, 33

17/01/2023 (684)

குறள் 558ல், தலைமை ஒழுங்காக இல்லாவிட்டால், இல்லாததைவிட இருப்பது கொடிது என்றார். அதாவது, அது, அது தன் இயல்பை இழந்துவிடும் என்கிறார்.


பொருளுடைமை இன்பத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால், முறைதவறிய ஆட்சி இருந்தால் அதன் இயல்பு மாறி துன்பத்தைக் கொடுக்கும். இது நிற்க.

உடை, உண்டி, உறையுள் (Roti, Kapada aur Makaan – in Hindi) இவைதான் அனைவருக்குமே அடிப்படைத் தேவைகள்.


உண்டி என்றால் உணவு; உறையுள் என்றால் தங்க ஒர் இடம். உறை என்றால் பாதுகாப்பு.


இந்த மூன்றில் எது முக்கியம் என்றால் தங்கும் இடம் தான். அதாவது நாடும் வீடும்!


நாடு வளமாக இருந்தால் வளர வாய்புகள் இருக்கும். வீடு நன்றாக அமைந்தால் அமைதி இருக்கும்.


நாமே முயன்று உணவையும், உடையையும் தேடிக்கொள்ள முடியும். நாடு வளமையாக இருந்து தலைமை சரியில்லாமல் இருந்தால் அந்த நாட்டின் பயன் மக்களுக்கு சென்று சேராது. நாட்டின் இயல்பு கோடும். அதாவது கெடும்! (கோடு என்றால் வளைதல்).


‘ஒல்லும்’ என்ற சொல்லுக்கு இயலும், சரியாக அமையும் இப்படி பல பொருள் எடுக்கலாம். நாம் முன்பு பார்த்த ஒரு குறள் காண்க 19/02/2021 மீள்பார்வைக்காக:


“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.” - குறள் 33; அதிகாரம் - அறன் வலியுறுத்தல்


ஒல்லும் = இயலும்; வகையான் =வழிகளிலெல்லாம்; ஓவாதே =ஒழியாமல், தவறாமல்; செல்லும்வாய் எல்லாம் =செயத்தகும் இடங்களிலெல்லாம்; செயல் = செய்க


“ஒல்லாது” என்றால் இயலாமல், இயலாது என்ற மறுதலைப் பொருள்களைத் தரும்.


சரி, ஏன் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறாய் என்றுதானே கேள்வி?

இதோ வருகிறேன், இன்றைய குறளுக்கு!


வான்மழை என்பது அனைத்து உயிர்களையும் காக்கும் அமிழ்து. தலைமை சரியில்லை என்றால், இந்த வான்மழையின் இயல்பும் கெடுமாம்!


முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.” --- குறள் 559; அதிகாரம் – கொடுங்கோன்மை


முறை கோடி மன்னவன் செய்யின் = முறை தவறி தலைமை செயல்படுமானால்; உறைகோடி வானம் பெயல் ஒல்லாது = நாடு அழிய மழையின் பயன் இல்லாது போகும்.


முறை தவறி தலைமை செயல்படுமானால், மழையின் பயன் இல்லாது நாடு அழியும்.


எப்படி மழையின் பயன் இல்லாமல் போகும் என்பதை விரித்தால் விரியும்.


கோட (அதாவது வளைய, மாறுபட) என்பது கோடி என்று இந்தக் குறளில் இரண்டு இடங்களிலும் திரிந்து வந்துள்ளது.


பி.கு.:

அறிஞர் பெருமக்கள், இந்தக் குறளுக்கு, “தலைமை சரியில்லை என்றால் வானம் பொய்க்கும்” என்று இரத்தினச் சுருக்கமாக உரை செய்திருக்கிறார்கள்.


அது எப்படி பொய்க்கும் என்பதற்கு என் ஆசிரியர் கொடுத்த விளக்கம்தான் மேலே நீங்கள் பார்த்தது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )




Comments


Post: Blog2_Post
bottom of page