top of page
Search

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் ... 382

28/06/2023 (846)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

“பெரியவங்களைப் பார்த்தால் பெருமாளைப் பார்த்தால் போல” என்ற ஒரு சொலவடை நம்ம ஊரில் இருக்கிறது.


பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார் பெருமான். இவர் பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர் என்று குறிக்கிறார்கள்.இவர் நம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் செய்த தீந்தமிழ் நூல்கள் நான்கு. அவையாவன: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.


திருவாய்மொழியில் மொத்தம் 1102 பாசுரங்கள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள நான்கு நூல்களில் உள்ள மொத்தப் பாசுரங்கள் 1290 என்கிறார்கள்.


திருவாய்மொழியில் உள்ள பாசுரங்கள் அந்தாதி முறைமையில் கட்டப்பட்டுள்ளன. அந்தாதி என்றால் என்னவென்று நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 19/10/2021 (238). மீள்பார்வைக்காக சுருக்கமாக:

அந்தாதி இரண்டு வகை: அந்தாதி செய்யுள்; அந்தாதி தொடை. அந்தம் என்றால் ‘கடைசி’, ‘முடிவு’; ஆதி என்றால் ‘முதல்’, ‘துவக்கம்’ என்று பொருள்படும்.


ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக அமையும்படி பாடுவதுதான் அந்தாதி செய்யுள்.

அதே போல இரண்டு அடிகளுக்கு இடையே அமைவது அந்தாதி தொடை.


நாம் திருவாய்மொழிக்கு வருவோம். அதில் 373 ஆவது பாசுரம்தான் பெரியவங்களைக் கண்டால் பெருமாளைப் பார்ப்பது என்னும் கருத்தைத் தெரிவிக்கிறார்.


திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;

உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகு அளந்தான்’ என்று துள்ளும்” ... பாசுரம் 373, திருவாய்மொழி, நம்மாழ்வார் பெருமான்.


சரி, இந்தச் செய்திகள் எல்லாம் எதற்கு என்றால் நம் பேராசான் ‘இறை’ என்ற சொல்லை அரசர்களுக்கு பயன்படுத்துகிறார். அதாவது, தலைவனானவன் தன் நற் குணங்களாலும், நற் செய்கைகளாலும் நம்முடனே இருந்து இந்த உலகத்தைக் காத்தலின் அவர்களும் இறைவர்களே என்றாராம். நமக்கு விளக்கிச் சொல்கிறார் பரிமேலழகப் பெருமான். அதனால் அவர்களின் சிறப்புபற்றி எடுத்துச் சொல்ல அமைந்ததுதான் ‘இறைமாட்சி’ என்னும் 39 ஆவது அதிகாரம்.


“நீங்க ரொம்ப நல்லவங்க இல்லையா? ஆகையால், இப்படி இருந்தால்தான் அழகு” என்று சாதுர்யமாகச் சொல்லும் வித்தைதான் இது!


இறைமாட்சி அதிகாரத்தின் முதல் பாடலில் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறும் ஒருங்கே அமைந்திருப்பவன் அரசருள் ஏறு என்றார். காண்க 27/06/2023 (845).


இரண்டாம் பாடலில் தலைமைக்கு இயல்பாக இருக்க வேண்டிய நான்கினைப் பட்டியலிடுகிறார். அதாவது அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்த நான்கும் எப்போதும் இடைவிடாமல் இருக்க வேண்டுமாம்.


அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.” ---குறள் 382; அதிகாரம் – இறைமாட்சி


வேந்தற்கு இயல்பு = அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டியன; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை = மன உறுதியும், ஈகையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந் நான்கு குணங்களும் எப்பொதும் அமைந்து இருத்தலாம்.


அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டியன: மன உறுதியும், ஈகையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணங்களும் எப்போதும் அமைந்து இருத்தலாம்.


எஞ்சுதல் என்றால் குறைதல்; கெடுதல்; இறத்தல்; சாதல், ஒழிதல்; மிஞ்சுதல்; தொக்குநிற்றல்; கடத்தல்; செய்யாதொழிதல்.


அதாவது குறைதல் என்றால் எஞ்சுதல்; என்றும் குறையாமல் இருந்தால் அதுதான் எஞ்சாமை. எஞ்சுதலுக்கு எதிர்ச்சொல் எஞ்சாமை.


மன உறுதியும், ஈகையும், அறிவும், ஊக்கமும் என்றும் குறையாமல் இருப்போமாக!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page