top of page
Search

அழிவதூஉம் ஆவதூஉம் ... 461

23/10/2022 (599)

தெரிந்து செயல் வகை (47ஆவது) அதிகாரத்தின் முதல் குறள்:


நம்மாளு: எது செய்தாலும் தெரிந்து செய்யனும். இதுதான் எல்லாருக்கும் தெரியுமே. இதிலே என்ன ஐயா இருக்கு?


ஆசிரியர்: தம்பி, கொஞ்சம் பொறுங்க. நம்ம பேராசான் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்.


எந்த ஒரு செயலையும் மூன்று நிலைகளாக பிரிக்கலாம். 1. உள்ளீடுகள் (inputs); 2. அந்த உள்ளீடுகளின் மேல் நிகழ்த்தப்படும் மாற்றங்கள் (Processing); 3. வெளியீடுகள் (outputs).


Input – process – output : இந்தப் படம் வரையத் தெரிந்துவிட்டால் போதும். எதையும் நிகழ்த்தலாம். இதைத்தான் System diagram என்கிறார்கள். இதைத்தான் நம்ம Computer engineers அடிக்கடி சொல்லி நம்மை பயமுறுத்துவாங்க.


நன்றாக சிந்தித்தால் வாழ்க்கையே அவ்வளவுதான்!


உள்ளீடுகள் அழியும். அதாவது, அதன் பண்புகள் அழியும். பின் ஒன்று தோன்றும். அதாவது அதனினும் வேறான பண்புகளோடு ஒன்று தோன்றும். இதற்கு இடையில் நடப்பதுதான் மதிப்பு கூட்டுதல் (value addition).


அரிசி, உளுந்து, வெந்தயம் ஊறவைத்து அரைத்தால் இட்லி மாவு. தனித்தனியாக இருந்தப் பண்புகள் அழிந்து புதுப் பொருளாக மாறி அதன் கூட்டு மதிப்பும் உயர்கிறது.


சில செயல்களினால் மதிப்பும் குறையும். அதைத் தவிர்க்க வேண்டும்.


இதை நான் சொல்லலைங்க! நம்ம பேராசான் சொல்லியிருக்கார்.


நம்மாளு: என்ன வள்ளுவப் பெருந்தகை இட்லி மாவு பற்றி சொல்லியிருக்காரா?


ஆசிரியர்: தனித் தனியாக சொல்வதற்கு பதில் சுருக்கமாக எல்லாவற்றையும் உள்ளடக்கி சொல்லி இருக்கிறார்.


அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.” --- குறள் 461; அதிகாரம் – தெரிந்து செயல் வகை


அழிவதூஉம் = எது மாற்றம் பெறுகிறதோ அதனையும்; ஆவதூஉம் = எது புதிதாகத் தோன்றுகிறதோ அதனையும்; ஆகி வழி பயக்கும் ஊதியமும் = உரு மாறுவதால் தோன்றும் மதிப்பு கூட்டலையும்; சூழ்ந்து செயல் = கூட்டி, கழித்துப் பார்த்து செய்ய வேண்டும்.


எது மாற்றம் பெறுகிறதோ அதனையும், எது புதிதாகத் தோன்றுகிறதோ அதனையும், உரு மாறுவதால் தோன்றும் மதிப்பு கூட்டலையும், கூட்டிக் கழித்துப் பார்த்து செய்ய வேண்டும்.


நம்மாளு: ஆக மொத்தம் லாபம் வந்தால் செய்யுங்கன்னு சொல்கிறார்.


ஆசிரியர்: ரொம்ப சரி. நாளை பார்க்கலாம்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்





Post: Blog2_Post
bottom of page