top of page
Search

இறைகடியன் என்றுரைக்கும் ... 564

22/01/2023 (689)

மக்கள் அச்சப்படும்படி நடக்கும் வெங்கோலர்கள், உறுதியாக சிக்கிரமே அழிவார்கள் என்னும் பொருளில் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ என்றார் குறள் 563ல்.


அதற்கு உரிய காரணங்களை அடுத்துவரும் குறள்களில் தெளிவுபடுத்துகிறார்.


முதல் காரணம் என்னவென்றால் மக்கள் தலைமையைக் ‘கடியன்’ என்று சொல்லத் துவங்குவார்களாம்! மக்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த, வெளிப்படுத்த தலைமை தன் நாட்டை இழக்குமாம். அதாவது, நாட்டைவிட்டு ஓட வேண்டிய நிலைமைக்கு தலைவர்கள் தள்ளப்படுவார்கள்.


‘கடுகி’ என்றால் ‘விரைந்து’ என்பது பொதுப் பொருள். இந்தக் குறளில் ‘கடுகி’ என்பதற்கு ‘சுருங்கி’ என்று பொருள் காண்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.


இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.” --- குறள் 564; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


இறை = தலைவன், மன்னன்; கடியன் = கொடியவன்; என்று உரைக்கும் இன்னாச் சொல் = நெஞ்சு பொறுக்காமல் மக்களால் சொல்லப்படும் அந்தக் கடுமையான சொல்; உறை கடுகி = பாதுகாப்பாக விளங்கும் நாடு பாதுகாப்பு தராமல் கைவிட; வேந்தன் = தலைவனை; ஒல்லைக் கெடும் = விரைவில் அழிக்குமாம்.


‘அறம் பாடுதல்’ என்று ஒரு வழக்கு தமிழில் உள்ளது. அநீதி இழைக்கப்பட்ட புலவர்கள், நெஞ்சம் நொந்து, அநீதி இழைத்தவர்கள் மேல் பாட்டு பாடுவார்களாம். அந்தப் பாட்டு கொடியவர்களை அழித்துவிடுமாம்.


அறம் வைத்துப் பாடுவது என்பதில் வஞ்சப் புகழ்ச்சி இருக்கும். அதனால், அது யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்கள் அதை ஆர்வத்துடன் கேட்பார்களாம். முழுமையாக கேட்டபின் அவர்கள் இறப்பார்களாம்.


“நந்திக் கலம்பகம்” தமிழின் கலம்பக இலக்கியங்களில் ஒன்று. ‘கலம்பகம்’ என்பது பல வகையான பாடல்கள் கலந்துவருவது. ஒன்பதாம் நூற்றாண்டில் காஞ்சியை ஆட்சி செய்த நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனைப் பற்றிய கலம்பகம். இயற்றியவர் பெயர் தெரியவில்லை.


அநியாயமாக போர் செய்து தனது சுற்றங்களை அழித்தான் என்றும், அதனால் வெகுண்ட ஒரு வாரிசு, தமிழ் கற்றுக் கொண்டு ‘அறம் வைத்து’ நந்திக் கலம்பகத்தைப் பாடினான் என்றும், அதைக் கேட்ட நந்தி வர்மன் இறந்தான் என்றும் சொல்கிறார்கள்.


இல்லை, இல்லை தமிழின் மேல் பற்று கொண்ட நந்தி வர்மன், அக் கலம்பகத்தை தற்செயலாக கேட்கப் போக, அதனை முழுமையாக கேட்க வேண்டும் என்ற தமிழ் ஆர்வத்தால், பிறர் எச்சரித்தும் அதனைக் கண்டு கொள்ளாமல் முழுவதும் கேட்டு மடிந்தான் என்றும் சொல்கிறார்கள்.


“வயிறெரிந்து சொல்றேன்டா ...” என்ற வயிற்றெரிச்சலை யாரிடமும் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாது.


அதாவது, சொற்கள் வாழவும் வைக்கும்; வீழவும் வைக்கும். கவனம் தேவை.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )





Post: Blog2_Post
bottom of page