top of page
Search

ஊரவர் கௌவை ... 1147, 1146, 69

19/10/2022 (595)

இந்த ஊர் பேச்சு எப்படி பரவ வேண்டும் என்று இருவரும் விரும்புகிறார்கள் என்பதை குறள் 1146ல் சொல்கிறார். அந்தக் குறளை நாம் ஏற்கனவே சிந்தி த் து உள்ளோம். காண்க 31/08/2021 (189).


மீள்பார்வைக்காக:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்பு கொண்டற்று.” --- குறள் 1146; அதிகாரம் - அலர் அறிவுறுத்தல்

கண்டது மன்னும் ஒருநாள் = (நான் என் காதலரைக்) கண்டது ஒரு நாள்; அலர்மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று = (ஆனால்,) பாம்பு, திங்களை கவ்வியதுன்னு அடிச்சு விட்டு ஊரெல்லாம் பரப்புகிறார்களே அது போல பரப்பி விட்டுட்டாங்க;

மன்னும் என்பதற்கு பொருள் இல்லை (அசை நிலை)


இது நிற்க.


வைணவர்கள் பணிந்து ஏத்தும் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வர்பிரான். இவரின் காலம் 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்கிறார்கள். இவர் தோன்றிய ஊர், இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திரு நகரி. இவர் பாண்டிய மரபில் தோன்றியதால் “மாறன்” என்ற இயற்பெயரைப் பெற்றார் என்றும் அதன் பின்னர் இவர் “மாறன் சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார் என்றும் வைணவ அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இதைத் தவிர இவருக்கு கிட்டத்தட்ட 35 பட்டப் பெயர்கள்!


நம்மாழ்வார்பிரான் இயற்றிய நூல்கள் நான்கு. அவையாவன: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திரு அந்தாதி, மற்றும் திருவாய் மொழி. அழகு தமிழில் அள்ளிக் கோலம் போட்டுள்ளார் நம்மாழ்வார் பெருந்தகை.


சரி, இப்போ ஏன் இந்தக் கதை? அதானே உங்கள் கேள்வி? பதில் இதோ:


ஊரவர் கவ்வை எருஇட்டு அன்னை சொல்நீர்மடுத்து

ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்

பேர்அமர் காதல் கடல் புரைய விளைவித்த

கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே!” --- திருவாய்மொழி. 5.3.4; நம்மாழ்வார்பிரான்.


அதாவது ஒரு பயிர் வளரனும் என்றால் அதற்கு முக்கியமானது இரண்டு: 1. நீர்; 2. எரு/உரம்.

கடல் போல் விரியும் காம நோய் எனும் பயிர் எப்படி வளர்கிறது என்றால் ஊராரின் பழிப்பேச்சுகள்தான் எரு/உரம். அன்னையின் கண்டிப்புகள்தான் நீர். இந்த இரண்டினையும் கொண்டு எங்களின் காமப் பயிர் எங்கள் நெஞ்சகளில் நீண்டதொரு காவியமாக வளர்கிறது என்கிறார் நம்மாழ்வார்பிரான்.


இது நிற்க. நாம் இன்றைய குறளுக்கு வருவோம்.


ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும் இந் நோய்.” --- குறள் 1147; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்


நம்மாழ்வார்பிரானின் பாசுரம் இந்தக் குறளின் நீட்சியாகவே தோன்றுகிறது.


ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக = ஊராரின் பழிப்பேச்சுகள் எருவாக, அன்னையின் சொற்கள் நீராக; நீளும் இந் நோய் = நீள்கிறது எங்களின் காம நோய் எனும் பயிர்.


‘அன்னை’ எனும் சொல் இந்தக் குறளில் மட்டும்தான் பயின்று வருகிறது, அதேபோல், ‘தாய்’ எனும் சொல்லும் ஒரே குறளில் மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறார் நம் பேராசான்.


அந்தக் குறளும் நாம் ஏற்கனவே பார்த்தக் குறள்தான். காண்க 12/04/2021 (85)

மீள்பார்வைக்காக:


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” --- குறள் 69; அதிகாரம் - புதல்வரைப் பெறுதல்

தாய் தன்மகனை = தாய் தம் மக்களைப்; ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் = பெற்ற பொழுதினில் பெற்ற உவகையைவிட மேலான பேருவுவகை அடைவாளாம்; தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட = தம் மக்களை ‘சான்றோர்கள்’ என அறிவுடையோர் சொல்லக் கேட்கும் பொழுது.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்








Post: Blog2_Post
bottom of page