top of page
Search

கடிதோச்சி ... 562

19/01/2023 (686)

ஆட்சியாளர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் வளங்கள் வீணாக்கப்படும், உற்பத்தி செய்யக் கூடிய மக்கள் உற்பத்தி செய்யாமல் இருப்பர் என்றார் கொடுங்கோன்மையின் முடிவுரையாக.


செங்கோன்மைக்கு (55ஆவது) அடுத்து கொடுங்கோன்மையைச் (56ஆவது) சொன்னார். மேலும் தொடர்கிறார். செங்கோன்மையும் மக்களை அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது என்கிறார் அடுத்த அதிகாரமான வெருவந்த செய்யாமையில் (57ஆவது அதிகாரம்).


நீதி நிர்வாகத்தின்(Administration of Justice) அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால் அது, வெளிப்படைத் தன்மையோடு (Open Justice) இருக்க வேண்டும்.


“The principle of open justice —that justice should not only be done but should manifestly and undoubtedly be seen to be done.” என்பார்கள்.


“ஒரு தலைமையானது நீதி வழுவாது நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் இருக்க வேண்டும்.” அதாவது, அரசின் நிர்வாகம் அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது.


அனைவரையும் சந்தேகித்து, தண்டித்துதான் வழிக்கு கொண்டுவரவேண்டும் என்பதல்ல நிர்வாகம். அது பழங்கால முறை. அதை Police State என்பார்கள். அதில் இருந்து, இப்போது பெரும்பாலான அரசுகள் Welfare State ஆக முயற்சிக்கிறார்கள். (State என்றால் அரசு). இருந்தாலும், விட்ட குறை தொட்ட குறை தொடர்கின்றன. அரசுகள் அடக்குமுறைகளைக் கையாள்கின்றன. மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. அவ்வாறு செய்யக் கூடாது என்பதற்காகத்தான் “வெருவந்த செய்யாமை” அதிகாரம்.


‘வெரு’ என்றால் அச்சம். ‘வெருவந்த’ என்றால் அச்சப்படும்படி என்று பொருள். மக்களை அச்சத்தில் வைக்கும் செயல்களைச் செய்யாதீர்கள் என்கிறார் இந்த அதிகாரத்தில்.


ரொம்ப அழகாகச் சொல்கிறார். ஒருத்தன் தப்பிதமாக ஏதாவது செய்தால் அவனை ஓங்கி அடிப்பதுபோல பாவனை இருக்கனுமாம். ஆனால் ஓங்கி அடிக்கக் கூடாதாம். தண்டனை அளவோடு இருக்கனும் என்பது பொருள்.


கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.” --- குறள் 562; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் = தன் மக்கள் தொடர்ந்து வளர வேண்டும் என்று நினைக்கும் தலைமை;

கடிதோச்சி மெல்ல எறிக = (ஒருவரை தண்டிக்க வேண்டும் என்றால்) கடுமையாக தண்டிப்பது போல பாவனை செய்து அளவான தண்டனை தருக;


தன் மக்கள் தொடர்ந்து வளர வேண்டும் என்று நினைக்கும் அரசாக இருந்தால் கடுமையாக தண்டிப்பது போல பாவனை செய்து அளவான தண்டனையைத் தரும்.

அளவுக்கு அதிகானமான தண்டனை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி செயல்படாமல் செய்யும். “நமக்கு ஏன் தம்பி வம்பு. நாம அதைச் செய்யப்போய் அது தவறாயிட்டா, அவ்வளவுதான்” என்று செய்ய வேண்டிய செயல்களையும் தவிர்ப்பர்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )





Post: Blog2_Post
bottom of page