top of page
Search

சிதைவிடத்து ஒல்கார் ... 597, 596

22/02/2023 (720)

உள்ளத்தனையது உயர்வு என்றார்.

அடுத்து,


உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596; அதிகாரம் – ஊக்கம் உடைமை


உள்ளுவது = நினைப்பது; மற்று = அசைச்சொல் ; அது தள்ளினும் = தப்பினாலும், அது கிடைக்கலனாலும்; தள்ளாமை நீர்த்து = தவறில்லை


அதாவது, நல்ல, உயர்ந்த எண்ணங்கள் தொடர்ந்து வந்தால் உள்ளம் உயரும். இந்தக் குறளையும் நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 03/02/2021 (17).


நன்றாக போர் திறனில் பயிற்சி பெற்ற யானையானது, கொத்து, கொத்தான அம்புகளால் தாக்குண்டாலும், அந்த அம்புகளைத் தன் உடம்பில் இருந்து பிய்த்து எரிந்து முன்னேறும். அதுபோல, தடைகள் பல வரினும், அதை உடைத்து எரிந்து முன்னேறுவர் உள்ளத்தில் உரம், அதாவது, ஊக்கம் உடையவர்கள் என்கிறார் நம் பேராசான்.


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்

பட்டபாடு ஊன்றும் களிறு.” --- குறள் 597; அதிகாரம் – ஊக்கம் உடைமை


புதை = கட்டு; புதை அம்பின்பட்டபாடு ஊன்றும் களிறு = யானையானது அம்புகள் கொத்து கொத்தாகத் தன்னைத் தாக்கினாலும் தளராது முன்னேறி நிற்கும், தாக்கும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் = (அது போல) உள்ளத்தில் உரமுள்ளவர்கள் தான் தாக்கப்படும் போதும் தளரமாட்டார்கள்; முன்னேறுவார்கள்.


யானையானது அம்புகள் கொத்து கொத்தாகத் தன்னைத் தாக்கினாலும் தளராது முன்னேறி நிற்கும், தாக்கும். அது போல, உள்ளத்தில் உரமுள்ளவர்கள் தான் தாக்கப்படும் போதும் தளரமாட்டார்கள்; முன்னேறுவார்கள்.


விடா முயற்சி; விண்ணளவு வளர்ச்சி!


பண்டைக்காலத்தில், தமிழர்களின் போர் படைகள் என்பது நால் வகை. அவையாவன: தேர் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட்படை என்பன.


இந்த நால்வகைப் படைகள் சண்டைக்குச் சரி. ஆனால், காதலுக்குக் கூட பயன்படுத்தினார்களாம்! ரொம்பவே, அதிகமாகத்தான் (ஓவராகத்தான்) இருந்துள்ளார்கள்!

நான் சொல்லலைங்க. நம்ம தொல்காப்பியப் பெருந்தகை சொல்கிறார்.

தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில், பொருளியலில் எனும் பகுதியில் 209 ஆவது சூத்திரம் (பாடல் வரிகள்)


தேரும் யானையுங் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப...” பாடல் வரிகள் 209; பொருளியல்; பொருளதிகாரம்; தொல்காப்பியம்


காதலிக்கும் போது, அதாவது, களவு காலத்தில், காதலன் தேரேறியும், யானை மீதும், குதிரையில் சவாரி செய்தும், ஏன் நடந்தும்கூட வெகு தூரம் வருவானாம் தன் காதலியைப் பார்க்க!


தேர் இருக்கேன்னு அதன் மீதே தொடர்ந்து வருவானாயின் சிலர் கவனித்துவிடக் கூடும் என்று பல வழிகளில் வருவானாம். அதிலும், நடந்து வருவதுதான் பெரும்பான்மையாக இருக்கக் கூடும் என்கிறார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணனார் பெருமான்.


ரத, கஜ, துரக, பதாதிகள் என்கிறார்களே அதை காதலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்!


எதை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்;

தளரா ஊக்கம் என்பதுதான் வெற்றிக்கு உரம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






Post: Blog2_Post
bottom of page