top of page
Search

செருவந்த ... 569, 95

27/01/2023 (694)

இது வரை, அச்சமூட்டும் செயல்களைச் செய்வதினால் அரசன் அழிவான் என்றும், அச்செயல்கள் ஐந்து வகையாக வெளிப்படும் என்றார்.


அஃதாவது: 1. அரும்செவ்வி; 2. இன்னா முகத்தன்; 3. கடுஞ்சொல்லன்; 4. கண் இலன்; 5. கையிகந்த தண்டம் என்றும் தெரிவித்தார்.


இதையெல்லாம் தெரிவித்த நம் பேராசான், அச்சம் தரத்தக்கச் செய்கைகளைச் செய்வதற்குரிய காரணத்தைச் சொல்லப்போகிறார்.


ஒரே ஒரு காரணம்தானாம்! அது என்னவென்றால், அது தான் “செருக்கு” என்கிறார். செருக்கு வருவதற்கும் ஒரே ஒரு காரணம்தான்! அது என்னவென்றால் “நான் பெரியவன் – நீ சின்னவன்” என்ற மன நிலை. இது வருவதற்கு வேண்டுமானால் பல காரணங்கள் இருக்கலாம். அது வேறு.


தலைக்கணம் ஏறிவிட்டால் தலை தானாக கவிழும் ஒரு நாள்! அதுவும் விரைவில் நிகழும் என்கிறார் இந்தக் குறளில்.


செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.” --- குறள் 569; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் = (தன் மனதில்) செருக்கு எழும் போது அதைத் தடை செய்யாத் தலைவன்; வெரு வந்து = அதாவது இன்னா முகத்தன், கடுஞ்சொல் முதலியனவைகளைப் பயன்படுத்தி; வெய்து கெடும் = அதனால் சீக்கிரமே கெடுவான். வெய்து = விரைவில், சூடாகி


தன் மனதில் செருக்கு எழும் போது அதைத் தடை செய்யாத் தலைவன், இன்னா முகத்தன், கடுஞ்சொல் முதலியனவைகளைப் பயன்படுத்துவான். ஆதலினால், சீக்கிரமே கெடுவான்.


கடுமையா பேசாதே; கடுகடுன்னு இருக்காதே; மற்றவர்களை அவமரியாதை பண்ணாதே ... இப்படித் தனித்தனியாக சொல்வதற்கு பதில் “ஒழுங்கா இரு தம்பி”ன்னு சொல்லிடலாம்.


சொல்லலாம்தான்! அப்ப நமக்கு கேள்விகள் ஏராளம் வரும் என்பதால் தனித்தனியாகவும் சொல்லிச் சென்றுள்ளார். தனித் தனியாகச் சொல்லவில்லை என்றால் வள்ளுவப்பெருமானே சொல்லவில்லை என்று அவர், அவர்கள் நினைப்பதை இட்டு நிரப்பிக் கொள்வார்கள்.


சரி, இத்தனைக் குறளையும் எப்படி கவனம் வைத்துக் கொள்வதுன்னு ரொம்பவே குழப்பிக்க வேண்டாம். அதற்கு ஒரு பாடலை ஏற்கனவே சொல்லிவிட்டார். காண்க 02/08/2022 (522).


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல்


இதில் ஒரு மனப்போராட்டம் வரும். பணிவாகவும் இருந்து, இனிமையாகவும் பேசினால் சரியான ______ன்னு அலட்சியம் பண்ணுவாங்களே, அப்ப என்ன செய்வது? அப்ப நமக்கும் செருக்கு வருமே? அவனுக்கு என்ன நான் குறைந்தவனா?


அந்தச் சமயத்தில் கவனம் வைங்க: “செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்...”


பெரும்பாலும் இயல்புகளை மாற்றிக் கொள்ளக்கூடாது. கடினமான செயல்தான்! பழகிப் பார்ப்போம். இப் பயிற்சிக்கு, நமக்கு, பலரும் நாள் தோறும் உதவுவார்கள்! வாழிய அவர்கள்.


“விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப்போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை.”


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)





Post: Blog2_Post
bottom of page