top of page
Search

தீயவை தீய பயத்தலால் ... 202,203

20/11/2023 (989)

அன்பிற்கினியவர்களுக்கு:

அற வழியில் நடப்பவர்கள் தீவினைக்கு அஞ்சுவர் என்றார். அடுத்து, தீவினையை நாம் ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று சொல்கிறார். ரொம்பவே, எளிமையான குறள். தீயவை தீய பயத்தலால் அதனிடம் சுட்டெரிக்கும் தீயினிடம் அஞ்சுவதைவிட அஞ்ச வேண்டும் என்கிறார்.

 

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். - 202; தீவினை அச்சம்

 

தீயவை தீய பயத்தலால் = நமக்கு இன்பம் தரும் என்று எண்ணி நாம் தீவினையை மேற்கொண்டால் அது இறுதியில் துன்பத்தையே தரும். (எனவே);

தீயவை தீயினும் அஞ்சப்படும் = தீயைத் தொட நாம் எவ்வாறு அஞ்சுவோமோ அதைக்காட்டிலும் தீயச் செயல்களைச் செய்யவதற்கு அஞ்சித் தவிர்க்க வேண்டும்.

நமக்கு இன்பம் தரும் என்று எண்ணி நாம் தீவினையை மேற்கொண்டால் அது இறுதியில் துன்பத்தையே தரும். எனவே, தீயைத் தொட நாம் எவ்வாறு அஞ்சுவோமோ அதைக்காட்டிலும் தீயச் செயல்களைச் செய்யவதற்கு அஞ்சித் தவிர்க்க வேண்டும்.

 

சரி ஐயா, நமக்கு ஒருவன் தீயவை செய்து கொண்டிருக்கிறானே அவனுக்கு நாம் எதிர்வினையாகக் கொஞ்சம் தீயதைச் செய்தால் என்ன?

 

அதையும் செய்யக் கூடாதாம். பகைவர்க்கும் தீவினையைச் செய்யாதீர்கள். உங்களுக்குக் கோபம் வந்து அண்டைவிட்டிற்குத் தீ வைத்தால் அந்தத் தீ உங்கள் வீட்டை நெருங்க எத்தனைக் காலம் எடுக்கும். இந்த அறிவைத்தான் அறிவினுள் எல்லாம் தலையான அறிவு என்கிறார்.

 

அறிவினு ளெல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல். - 203; தீவினை அச்சம்

 

செறுவார்க்கும் தீய செய்யா விடல் = பகைவர்க்கும் தீயவை செய்யாது விடுவது; அறிவினுள் எல்லாம் தலை என்ப = நம்மை உயர்த்தும் அறிவினுள் எல்லாம் முதன்மையான அறிவு என்பர் நல்லோர்.

 

பகைவர்க்கும் தீயவை செய்யாது விடுவது, நம்மை உயர்த்தும் அறிவினுள் எல்லாம் முதன்மையான அறிவு என்பர் நல்லோர்.

 

வாய்ப்பு இருந்தும், பகைவரிடம் நாம் சற்று அளவுக்கு மீறியச் செயல்களைச் செய்யாமல் தவிர்ப்பதால் நமக்குத் துன்பம் வராது என்ற தெளிவு, தலையாய அறிவு என்கிறார். பகைவர்க்கும் என்றதனால் அனைவர்க்கும் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டது. நல்லவையை நாட வேண்டும்; தீயவைக் கண்டு அஞ்ச வேண்டும்.

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page