top of page
Search

தாளாண்மை இல்லாதான் ... 614

Updated: Mar 20, 2023

18/03/2023 (744)

வாள் + ஆண்மை = வாளை ஆளும் தன்மை.


போரினில், போர்கருவிகளைத் திறம்பட நிருவகிக்கும் தன்மைக்கு ‘வாளாண்மை’ என்று பயன்படுத்துகிறார்கள். அதைச் செய்யக் கூடியவர்கள், பெரும் வீரர்களாக மட்டுமே இருக்க முடியுமே தவிர கோழைகளாக இருக்க முடியாது!


கோழைகளைப் போருக்குத் தலைமை தாங்கவிட்டால் என்ன ஆகும்?


“புலிக்கு பயந்தவர்களெல்லாம் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள்” என்ற வீர வசனத்தை மட்டும்தான் கேட்க முடியும்!


தாளாண்மை என்றால் முயற்சிகளை நிருவகிக்கும் தன்மை என்று நமக்குத் தெரியும். தாளாண்மை இல்லாதவனின் வேளாண்மை, அதாங்க, முயற்சி என்றால் என்னவென்றே தெரியாத நம்மாளின் ஆளும் தன்மை எப்படி இருக்கும்?

கோழையின் கையில் போர் தலைமையைக் கொடுத்தால் அந்தக் களத்தில் மக்கள் எப்படி அழிவார்களோ அப்படி என்கிறார் நம் பேராசான்.


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.” --- குறள் 614; அதிகாரம் – ஆள்வினை உடைமை


பேடி = கோழை; பேடி கை வாளாண்மை போலக் கெடும் = கோழையின் தலைமையில் போரை நடத்தச் சொன்னால் எப்படி அவன் கீழ் இருக்கும் வீர்கள் அழிவார்களோ அது போல; தாளாண்மை இல்லாதான் வேளாண்மை = முயற்சிகளை எவ்வாறு நிருவாகம் செய்வது என்று அறியாதாவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் மக்களும் அழிவார்கள்.


கோழையின் தலைமையில் போரை நடத்தச் சொன்னால் எப்படி அவன் கீழ் இருக்கும் வீர்கள் அழிவார்களோ, அது போல, முயற்சிகளை எவ்வாறு நிருவாகம் செய்வது என்று அறியாதாவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் மக்களும் அழிவார்கள்.


இந்தப் பாடலின் மூலம் ஆள் வினை உடைமையின் முக்கியத்துவம் சொல்லப்பட்டது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page