top of page
Search

தக்கார் நன்றே தரினும் ... 114, 456, 113

27/09/2023 (935)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

குறள் 112 இல் நடுவுநிலைமை தவறாமல் இருப்பின் காலம் கடந்தும் நிற்பர் என்றார்.


அதனையே, ஒருவர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார் என்றால் அவர் நடுவுநிலைமையோடு இருந்தார் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம் என்கிறார்.


தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.” --- குறள் 114; அதிகாரம் – நடுவுநிலைமை


தக்கார் = நடுவுநிலைமையில் இருப்பவர்; தகவிலர் = நடுவுநிலைமையில் இருந்து நழுவியவர்; என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் = என்பது அவர் அவர்கள் செய்து முடித்தச் செயல்களாலும் அதன் விளைவுகளாலும் கண்டு கொள்ளலாம்.


நடுவுநிலைமையில் இருப்பவர், நடுவுநிலைமையில் இருந்து நழுவியவர் என்பது அவர் அவர்கள் செய்து முடித்தச் செயல்களாலும் அதன் விளைவுகளாலும் கண்டு கொள்ளலாம்.


நடுவுநிலைமையாக இருப்பதற்கு ஏதாவது குறுக்குவழி இருக்கா? இருக்கு. மனத்தை தூய்மையாக வைத்தாலே போதும் என்றார் நம் பேராசான். காண்க 25/03/2022 (392). மீள்பார்வைக்காக:


மனந்தூயார்க்கு எச்சம்நன்றாகும் இனந்தூயார்க்கு

இல்லை நன்றுஆகா வினை.” --- குறள் 456; அதிகாரம் – சிற்றினம் சேராமை


மனம் தூய்மையாக இருந்தால் அவர்களின் அடியொற்றி வருபவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்; இனம் தூய்மையானால் அவர்களுக்கு நன்றாகாத செயல்கள் ஏதும் இல்லை. இனம் = உடனிருப்பவர்கள்.


மனசில் இருக்கு மந்திரம்!


நடுவுநிலைமை தவறுவதால் சில சமயம் உடனடிப் பயன்கள் கிடைப்பது போலத் தெரியலாம். இருப்பினும் அந்த முயற்சியை, அந்த எண்ணத்தை அக்கணமே தவிர்க்க வேண்டும் என்கிறார்.


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.” --- குறள் 113; அதிகாரம் – நடுவுநிலைமை


நன்றே தரினும் = நடுவுநிலைமைத் தவறுவதால் நல்லதொரு பொருள் அமைவதில்லை. உடனடியாகச் சில நன்மைகள் விளைவது போல இருப்பினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை = நடுவுநிலைமை பிறழ்ந்த எண்ணங்களை; அன்றே ஒழிய விடல் = அக்கணமே விட்டுவிட வேண்டும்.


நடுவுநிலைமைத் தவறுவதால் நல்லதொரு பொருள் அமைவதில்லை; உடனடியாகச் சில நன்மைகள் விளைவது போல இருப்பினும் நடுவுநிலைமை பிறழ்ந்த எண்ணங்களை அக்கணமே விட்டுவிட வேண்டும்.


“நன்றேதரினும்” என்றதனால் நடுவுநிலைமை பிறழ்வது நன்மை தருவதில்லை என்பது குறிப்பு.


இகத்தலான் என்பது இகந்து என்று திரிந்து வந்துள்ளது. இகல் என்றால் மாறுபாடு. இகந்து என்றால் நீங்கி, மாறுபட்டு, பிறழ்ந்து என்று பொருள் எடுக்கலாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.









Post: Blog2_Post
bottom of page