top of page
Search

நெடுநீர் மறவி ... 605

01/03/2023 (727)

மறதி. ஆமாம், மறதியிலேதான் நிறுத்தியிருந்தோம்!


ஒருத்தன் ஆர்வமே இல்லாமல் வேலையைப் போட்டு இழுத்திட்டே இருந்தானாம் அப்புறம், அவனுக்கு எப்படிச் செய்யனும் என்பதும் மறந்தும் போயிட்டுதாம். “ச்சே, என்ன வேலைடா இதுன்னு” சொல்லிட்டு சோம்பிப்போய் காலை நீட்டி உட்கார்ந்தானாம்!


அப்படியே. கொஞ்சம் கட்டையை நீட்டலாம்ன்னு தோணவே காலை நீட்டி படுத்தானாம். அருமையான தூக்கம் வந்துதாம்!


தூக்கத்திலே அவனுக்கு ஒரு கனவு. ஒரு ஆற்றங்கரையோரம் இருக்கானாம். ஒரு முக்கிய வேலையாக அடுத்த கரைக்கு போகனுமாம். சுற்றும் முற்றும் பார்த்தானாம். கொஞ்ச தூரத்திலே ஒரு படகுத் துறைமுகம் இருந்துதாம்.

சரி, அங்கே போய் ஒரு படகில் ஏறி போகலாமென்று நினைச்சானாம். ச்சே, அவ்வளவு தூரம் நாம நடப்பதா? நமக்கு என்ன அறிவில்லையா என்ன?


நம்ம கிட்ட நாலு கட்டைகள் இருக்கு. அதையெல்லாம், ஒன்றாக ஒரு கட்டு கட்டி நாமே ஒரு கட்டுமரம் செய்து கிளம்புவோம் என்று அந்தக் கட்டைகளைக் கட்ட ஆரம்பித்தானாம். கயிறு வேண்டுமே? கீழே பார்த்தால், ஒரு நன்றாக ஈரத்திலே நனைந்த கயிறு ஒன்று இருந்துதாம். அதைக் கொண்டு அந்த நான்கு கட்டைகளையும் கட்டி கிளம்பிட்டானாம்! ...


‘ஐயா, அம்மா என்னை யாராவது காப்பாற்றுங்க. என்னை இந்த வெள்ளம் அடிச்சிட்டு போகுது” ன்னு ஒரே சத்தம்.


அவன் பக்கதிலே வேலை செய்து கொண்டிருந்த தோழர் ஒருத்தர் “என்னடா வழக்கம் போல உனக்கு கனவா?” என்று கேட்டுக்கொண்டே அவன் மேலே ஒரு வாளி தண்ணிரை ஊற்றி எழுப்பி உட்கார வைத்தாராம்.


அந்தத் தோழரிடம் வந்தக் கனவைப் பற்றி சொன்னானாம். அதற்கு, அவர், “நண்பா, அந்த நான்கு கட்டைகளின் பெயர்கள் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமா?” என்றாராம்.


நம்மாளு: ங்கே...ன்னு விழிக்க ..


தோழர்: அந்த நான்கு கட்டைகளின் பெயர்கள் வேறு ஒன்றுமல்ல. நெடுநீர், மறவி, மடி, துயில் என்றாராம்.


நம்மாளு: உனக்கு எப்படித் தெரியும்?


தோழர்: நம்ம பேராசான் வள்ளுவப் பெருந்தகைதான் சொல்லியிருக்கார் என்றாராம்.


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.” --- குறள் 605; அதிகாரம் – மடி இன்மை


நெடுநீர் = விரைந்து செய்ய வேண்டிய செயலைச் சும்மா இழுத்திட்டே இருப்பது; மறவி = மறதி; மடி = சோம்பல்; துயில் = செய்ய வேண்டியதைச் செய்யாமல் காலை நீட்டி தூங்குவது; நான்கும் = இந்த நான்கும்; கெடு நீரார் = அழிவெனும் ஆற்றில் பயனிப்பவர்கள்; காமக் கலன் = விரும்பி ஏறும் மரக்கலன்.


விரைந்து செய்ய வேண்டிய செயலைச் சும்மா இழுத்திட்டே இருப்பது, மறதி, சோம்பல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் காலை நீட்டி தூங்குவது என்ற இந்த நான்கும் அழிவெனும் ஆற்றில் பயனிப்பவர்கள் விரும்பி ஏறும் மரக்கலன்.


“நான் கிளம்பறேன் தோழரே. வேலை எக்கச்சக்கமா இருக்கு. நாளைக்கு சந்திக்கலாம்.” என்று கிளம்பினாராம் நம்மாளு.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)







Post: Blog2_Post
bottom of page