top of page
Search

நுனிக்கொம்பர் ... 476

06/11/2022 (612)

வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ....” கவிஞர் வைரமுத்து, திரைப்படம் - அண்ணாமலை, தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில்.


ஒரு ஊரிலே இப்படி ஒரு பால்காரர் இருந்தாராம். பழகின மாட்டிலிருந்து பால் கரப்பது ஒன்றும் பெரிதல்ல. இவர் எந்த மாட்டிலிருந்தும் பால் கரப்பதிலே பெரும் கில்லாடியாம்.


“இவர் இருக்காரே காராம் பசு மட்டுமில்லப்பா, விட்டால் காளை மாட்டிலிருந்துகூட பால கரந்திடுவாரு. பெரிய ஆளு அப்படி, இப்படின்னு ஊரிலே ஒரே பேச்சாம்.


அவரும் முதலிலே நம்பலையாம். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவரும் நம்ப ஆரம்பிச்சிட்டுராம். செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்னு நாளைக் குறிச்சுட்டாராம் காளை மாட்டிலிருந்து பாலைக் கரக்க!


ஊர் மக்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். “என்ன சோதனைடா சரவனா”ன்னு வாயடைச்சு போயிட்டாங்களாம். பத்திரிக்கைகாரங்க சும்மா விடுவாங்களா? அவர்கிட்ட மைக்கை (ஓலிவாங்கி – Microphone) நீட்டினாங்களாம். அவர், அவர் பாணியிலே (styleலே) “wait and see” ன்னாராம். பொறுத்திருந்து பாருங்க என்பதை அப்படிச் சொன்னாராம்.


விடுவாங்களா பத்திரிக்கைக் காரங்க. "சார், காளைக்குதான் பால் மடியே கிடையாதே நீங்க எப்படி பால் கரப்பீங்க"ன்னு கேட்டாங்களாம். அவருக்கு கேள்வி கேட்டாலே கோபம் வரும். “அதான், கொம்பு இருக்கு இல்ல” ன்னாராம்!


இருந்தாலும் அவருக்கு லேசா ஒரு சந்தேகம் வந்துட்டுதாம். இன்றைக்கு இதை பயிற்சி செய்து பார்த்துட வேண்டியதுதான்னு முடிவு செய்தாராம்.


அவரிடம் ஒரு நல்ல பண்பு என்னவென்றால் எதையும் பயிற்சி செய்யாமல் வெளியே வரமாட்டாராம். அதுதான் அவரின் வெற்றிக்கு பெரும்பங்கு வகிப்பது.


ஒரு நாள், யாருக்கும் தெரியாமல் ஒரு காளையை வீட்டுக்கு கூட்டி வந்து முயற்சி செய்தாராம். அது விட்டுதாம் ஒரு உதை.


மறுநாள் தலைப்புச் செய்தி என்னவென்றால் “மாபெரும் பால்காரருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், காளையிலிருந்து பால் கரக்கும் செயலை நிரந்தரமாக தள்ளி வைக்கிறார்.”


இது நிற்க.


சரி, இந்தக் கற்பனைக் கதை எதற்கு என்கிறீர்களா? நம்ம பேராசான்தான் சொல்லச் சொன்னார்.


அதாவது, ஒருவர் ‘தன்வலிமை’ மற்றும் ‘வினையின்வலிமை’ அதன் கூட்டு எப்படி என்று தெரியாமல், ஒரு செயலைச் செய்ய முற்பட்டால் அதுவே அவருக்கு இறுதியாகிவிடுமாம். இதைச்சொல்லத்தான் அந்தக் கதை. அந்தப் பால்காரர் புத்திசாலி. தப்பித்துக் கொண்டார்.


இந்த மாதிரிதான், ஒருத்தர் மரத்துக்கு மேலே ஏறினாராம். உச்சாணிக் கொம்புக்கு போயிட்டாராம்! அதற்கும் மேலே ஒரே ஒரு இளந்தழைக் கொம்புதான் இருக்கு. அதன் மேலேயும் ஏற முற்பட்டால் என்ன ஆகும்?


அது முறிந்து, அவர் கீழே விழுந்து அதனால் அவரின் உயிருக்கே அபாயம் இருக்கு இல்லயா?


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்

உயிர்க்கு இறுதியாகி விடும்.” --- குறள் 476; அதிகாரம் – வலியறிதல்


கொம்பர் நுனி ஏறினார் = உச்சாணிக் கொம்பில் ஏறியவர்; அஃது இறந்து ஊக்கின் = அதையும் கடந்து செல்ல முயன்றால்; உயிர்க்கு இறுதியாகி விடும் = (அதுவே, அவர்) உயிருக்கு இறுதி ஆகிவிடும். அதாவது ‘காலிதான்’.


கொம்பர் = மரத்தின் கொம்புகள்; கொம்பர் நுனி = உச்சாணிக் கொம்பு


நுனிக்கொம்பர் = கொம்புகளுடைய நுனி (இலக்கணக் குறிப்பு – பின் முன்னதாகத் தொக்க ஆறாம் வேறுமைத் தொகை – இதைப் பிறகு விரிக்கலாம் என்றார் ஆசிரியர்)


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்





Post: Blog2_Post
bottom of page