top of page
Search

அறம் பொருள் இன்பம் ... 501

29/11/2022 (635)

இடனறிதல் (50ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து “தெரிந்து தெளிதல்” எனும் (51ஆவது) அதிகாரத்தை வைக்கிறார்.


அரசு உயர் பணிகளில் ஒருவரை பணியமர்த்தும்முன் “vigilance clearance certificate” (அதாவது கண்காணித்தபின் அனுமதி) ஒன்றினைப் பெறுவார்கள். அது மறைமுகமாக நடக்கும், அதற்கு தகுந்தவர்களைக் கொண்டு அவர்களின் செயல்களை, கண்காணித்து, அந்த அறிக்கையை அரசு பெற்று முடிவெடுக்கும்.


முக்கியமாக நான்கு காரணிகளை கண்காணிப்பார்கள். அவையாவன: 1. Corruption; 2. Possession of assets disproportionate to their income; 3. Moral turpitude; and 4. Violation of administrative rules.


(ஊழல்; வருமானத்திற்கும் அதிகமான அளவில் சொத்துகள்; ஒழுக்கக் கேடு; நிர்வாக சட்ட திட்டத்திற்கு புறம்பாக நடத்தல்.)


அதாவது, ஒருவன் தப்பு செய்ய நான்கு காரணிகள். அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம்.


அறத்தினால்கூட தப்பு செய்வானா என்றால் அதுவும் நடக்குமாம். அதாவது, இந்தத் தலைமை சரியில்லை. ஒரு நல்லத் தலைமையைக் கொண்டுவர நீ உதவ வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து அறமல்லாச் செயல்களைச் செய்வது. நோக்கம் வெளிப்பார்வைக்கு அறம். ஆனால், செயல் அறமல்ல. சில உள்நோக்கம் கொண்டவர்கள் இவ்வாறு கிளர்ச்சியாளர்களை உருவாக்குவார்கள்.


பொருளைப் பற்றிச் சொல்லவேண்டாம். அதனால் கவரப்பட்டு அதற்கு அடிமையாகி ஊழல்கள் செய்வோர் ஏராளம்.


இன்பம்: சிலர் பொருளுக்கு மயங்க மாட்டார்கள். சிற்றின்பத்திற்கு மயங்குவார்கள். மது, மாது, சூதினிலே நாட்டம் இருக்கும். அதை மோப்பம் பிடித்து எதிரிகள் சாய்த்துவிடுவர். உண்ட வீட்டிற்கு இரண்டகம் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


இதிலெல்லாம் தப்பித்து வந்தால் அடுத்து உயிர் அச்சம். அதாவது, தனது பதவிக்கு அல்லது தனக்கோ, தன்னைச் சுற்றியுள்ளோர்களுக்கோ ஒரு ஆபத்துவரும் என்றால் அந்தத் தருணத்தில் உறுதியாக இருக்க முடியாமல் தப்பு செய்வார்கள். சட்ட திட்டத்தை மீறுவார்கள்.


இதையெல்லாம்தான் vigilance department சரிபார்த்து சான்றிதழ் தருமாம்! அந்த மாதிரி சான்றிதழ் பெற்றவர்கள்தான் இப்போதும் ஆட்சிப் பணிகளுக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார்களாம். நம்புவோமாக. இது நிற்க.


இப்போது குறளைப் பார்ப்போம்.


அறம் பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

திறம் அறிந்து தேறப் படும்.” --- குறள் 501; அதிகாரம் – தெரிந்து தெளிதல்


ஒருவரை முக்கியமான பொறுப்பில் நியமிக்கும் முன் அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் ஆகிய காரணிகளால் அவர் தடுமாறும் வாய்ப்பு உண்டா என்று சோதித்து அறிந்தபின் அவரை தேர்ச்சி செய்து நியமிக்கலாம். இதுதான் தெரிந்து தெளிதல்.


இது அக்காலத்தில் அமாத்தியர்களுக்குச் சொன்னது. ‘அமாத்தியர்’ என்றால் அமைச்சர்கள். அவர்களை ‘உபதை’ செய்து தேர்ந்தெடுக்கவேண்டும். ‘உபதை’ என்றால் சோதனையாம்.


‘அமாத்தியர்கள்’ என்ற சொல்லை விரித்தால் விரியும். இப்போதைய வழக்கத்தில் நமது மாண்புமிகு மந்திரிமார்கள்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






Post: Blog2_Post
bottom of page