top of page
Search

எண்ணித் துணிக ... 467

28/10/2022 (604)

“முன் வைத்தக் காலைப் பின் வைக்கமாட்டான்” அவன்னு சொல்வாங்க இல்லையா அதுதான் அடுத்தக் குறள்.


போகும் திசை தெரிந்துவிட்டால், அதன் நோக்கமும் தெளிவாக இருக்குமானால் முன் வைத்தக் காலைப் பின் வைக்கத் தேவையில்லை.


எரும்புகள் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கும். நடுவில் ஒரு தடை இருப்பின், அதாவது ஒரு கல்லோ அல்லது ஒரு பொருளோ வழியை மறைத்து நிற்குமானால், அது போகும் திசைக்கு ஏற்றவாறு அந்தத் தடையைச் சுற்றிக் கொண்டுப் போகும்.


எறும்புகளும் முன் வைத்தக் காலைப் பின் வைப்பதில்லை!


காலை எடுத்து வைத்துவிட்டு “எங்கே நான் போவது?” என்று என்ணுவது இழுக்கு என்கிறார் நம் பேராசான்.


இது ஏதோ நடந்து செல்வதற்குன்னு நினைக்காதீங்க. இது எல்லா செயல்களுக்கும்தான்.


ஒன்றை முடிக்கனும் என்றால் நான்கு வழிமுறைகள் இருப்பது நமக்குத் தெரியும்.

அவையாவன: கொடுத்தல், இன் சொல் சொல்லல், வேறு படுத்தல், மற்றும் ஒறுத்தல். இதைத்தான் வடநூலார் “தான, சாம, பேத, தண்டம்” என்கிறார்கள்.


கொடுத்தல் அதாவது ‘தானம்’ ஐந்து வகைப்படுமாம். அவையாவன: 1.) கிடைத்தற்கரிய பொருளைக் கொடுப்பது, 2.) தனக்குத் தரும் பொருளை வாங்காமல் விடுவது, 3.) கொடுக்க வேண்டியப் பொருளைக் கொடுத்துவிடுவது, 4.) பிறன் பொருளைக் கொடுப்பது, 5.) தனக்கு செலுத்த வேண்டிய கப்பம், வரி, வட்டி ஆகியவைகளை வாங்காமல் விடுவது.


சாமமும் அதாவது இனிதாகப் பேசும் முறைகளும் ஐந்து வகைப் படுமாம். அவையாவன: 1) வணங்கல், 2) புகழ்தல், 3) எதிர் கொள்ளல், 4) நட்பு கூறல், 5) உறவு கூறல்.


பேதம் அல்லது வேறு படுதல் என்பது மூன்று வகைப் படுமாம். அவையாவன: 1) நட்பு ஒழிதல், 2) கூடினவரைப் பிரித்தல், 3) வேறு பகை விளைத்தல்.


தண்டம் அல்லது ஒறுத்தல் என்பதும் மூன்று வகையாம். அவையாவன: 1) துன்பஞ்செய்தல், 2) பொருளைக் கொள்ளுதல் (அவன் பொருளைத் தூக்கிவிடுவது), 3) கொல்லுதல் (ஒரே வழி காலி பண்ணிவிடுவது – அது அந்தக் காலத்தில் இருந்தது. இப்போ அதெல்லாம் தேவையில்லை. அவனின் புகழைப் பெருமையை அவன் செயல்களை வைத்தே கொன்று விடுவது - character assasination செய்வது)


இப்படித்தான் தமிழில் அனைத்தையும் பகுத்துள்ளார்கள்.


இரண்டு வரியில் நம் பேராசான் சொன்னது இப்படி விரிகிறதாம். இதையும் மேலும் விரிக்கலாமாம்.


சும்மாவா சொன்னார் இடைக் காடர் என்று அழைக்கப்படும் புலவர் பெருமானார்:


கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி

குறுகத் தரித்தக் குறள்.” --- இடைக்காடர் பிரான்


ஔவைப் பிராட்டியார் இப்படிச் சொல்கிறார்:


அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி

குறுகத் தரித்தக் குறள்.” --- ஔவை பிராட்டியார்


சரி நாம் இன்றையக் குறளுக்கு வருவோம். அனைவரும் அறிந்த (popularஆன) குறள்:


எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்

எண்ணுவம் என்பது இழுக்கு.” --- குறள் 467; அதிகாரம் – தெரிந்து செயல் வகை


கருமம் எண்ணித் துணிக = செயத் தக்க செயலையும் அதனை செவ்வனே செய்து முடிக்கும் வழிமுறைகளையும் எண்ணித் துவங்குங்க;


துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு = ஆரம்பிச்சுடுவோம், அப்புறம் வர, வர பார்த்துக்கலாம் என்று எண்ணுவது தவறு.


வழிமுறைகள் என்பது, அதாங்க நாம் முன்னே பார்த்த தான, சாம, பேத, தண்டம்தான்!


இதைத்தான் Plan A, Plan B, Plan C and PlanD என்று மேலாண்மை நிர்வாகத்தில் (Management Administration) வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்






Post: Blog2_Post
bottom of page