top of page
Search

எள்ளாத எண்ணி ... 470

31/10/2022 (607)

கி.பி. 1600 வரை, மேற்கத்திய உலகம் என்ன நினைத்துக் கொண்டிருந்தது அல்லது எல்லோரும் என்ன நினைக்க வேண்டும் என்று கருதியது என்பது ஒரு வேடிக்கையான கருதுகோள் (hypothesis).


அதுவரை, இந்த பூமியை மையமாக வைத்து, சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றி வருகிறது என்றும் (Geo-centric system), மேலும், இந்த பூமி ஒரு தட்டையானத் தட்டு என்றும் கருதியது.


அதை மறுத்து, அது அப்படியல்ல என்று நிருவியவர்களை “பைத்தியக்காரர்கள்” என்று விலக்கியும் வைத்தது.


ஆடை அணியாத ஊரில் ஆடை அணிந்தவர்கள் பைத்தியக்காரர்கள்!


இது நிற்க.


ஒரு அரசனோ அல்லது தலைவனோ தன் நிலைமைக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள், மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியது போலும் இருக்க வேண்டும். மக்களின் பெரும்பான்மை நம்பிக்கையை அது சிதைக்கக் கூடாது.


புதிய உத்திகள், பெரும்பான்மை நம்பிக்கையைத் தகர்க்குமானால், அதற்கு சரியான முறையில் தரவுகளை மக்களிடம் பரப்பி கருத்துருவாக்கம் செய்ய வேண்டும். புதிய கருத்துகளுக்குச் சரியான அடித்தளமிடவேண்டும். அதற்குப்பின் அதைச் செயல்படுத்த முயலலாம்.


இதை நம் பேராசான் முடிவுரையாக இந்த அதிகாரத்திற்கு வைக்கிறார் இவ்வாறு:


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.” ---குறள் 470; அதிகாரம் – தெரிந்து செயல் வகை


உலகு தம்மோடுகொள்ளாத கொள்ளாது = இந்த உலகமானது அதன் பெரும்பான்மைக் கருத்துக்கு முரணானதை ஏற்றுக் கொள்ளாது;


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் = ஆகையினால், உலகம் புறம் தள்ளக்கூடியச் செயல்களை பரிசீலித்துச் செய்ய வேண்டும்.


இந்த உலகமானது அதன் பெரும்பான்மைக் கருத்துக்கு முரணானதை ஏற்றுக் கொள்ளாது. ஆகையினால், உலகம் புறம் தள்ளக்கூடியச் செயல்களை பரிசீலித்துச் செய்ய வேண்டும்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page