top of page
Search

காலம் கருதி மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் ...485, 624

13/11/2022 (619)

“பொறுமை கடலினும் பெரிது” – இப்படி ஒரு பொன்மொழி இருக்கிறது.

சிலர் இதைக் கிண்டல் செய்யும் வகையில் “எருமை அதனினும் பெரிது” என்பார்கள்.


எதற்காக என்றால், சிலர் சோம்பியே திரிவார்கள் அவர்களுக்காக. கிளம்பு தம்பி, "பொறுத்தது போதும் பொங்கி எழு”ன்னும் முடுக்கி விட.


எருமையாரைக் கிண்டல் செய்யும் நோக்கம் சிறிதளவும் இல்லை நமக்கு. எருமையாரின் பெருமைகளைப் பற்றி நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 02/05/2021 (105). மீள்பார்வைக்காக நம் பேராசான் சொன்னது:


மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.”---குறள் 624; அதிகாரம்–இடுக்கண் அழியாமை மடுத்த = தடுத்த;வாய் = வழி/இடம்; எல்லாம் = எதுவானாலும்; பகடு = எருது/கடா; அன்னான் = போல இருப்பவனுக்கு; உற்ற இடுக்கண் = வந்த துன்பம்; இடர்ப்பாடு உடைத்து =அந்த துன்பம் தூள் தூளாயிடும்.


இது நிற்க.


“பொறுத்தார் பூமி ஆள்வார்” - இது ஒரு பண்டைக்கால நன்மொழி. இந்த நன்மொழியும்கூட திருக்குறளில் இருந்து வந்திருக்கலாம்.

எதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்?


இந்த நன்மொழிக்கு, மெதுவாக செய்யலாம் என்பது நோக்கமல்ல.


‘நோக்கம்’ (goal) எது என்று அறிந்து, அதற்கான காலம் வரும்வரை கலங்காது பொறுமையாக இருந்து, செயல் ஆற்றுவதுதான் அந்தப் பொறுமை. தள்ளிப் போடுவது (procrastination) அல்ல பொறுமை.


இதை, ஆங்கிலத்தில் “strike while the iron is hot” என்கிறார்கள். இரும்பை நன்றாக காயும் வரை பொறுமையாக இருந்து, பின் அதை அடித்தால்தான் நமக்கு ஏற்றவாறு அதை உரு மாற்றலாம்.


எண்ணெய் சூடானால்தான் பூரி சரியாக போட முடியும்!


நீங்க வெல்ல நினைப்பது உலகத்தை! அதற்கு ஏற்ற திட்டமிடல் வேண்டும். காலம் கனியும்வரை கலங்காது இருக்க வேண்டும்.


இதை நம் பேராசான் இப்படிச் சொல்கிறார்:


காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.” --- குறள் 485; அதிகாரம் – காலமறிதல்


ஞாலம் கருது பவர் = உலகத்தை வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;

கலங்காது காலம் கருதி இருப்பர் = தளர்ந்துவிடாமல், குறிக்கோளோடு தக்க தருணத்தை எதிர் நோக்கி இருப்பர்.

உலகத்தை வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள், தளர்ந்துவிடாமல், குறிக்கோளோடு தக்க தருணத்தை எதிர் நோக்கி இருப்பர்.


இந்தக் குறளுக்கு, கீழ்வருமாறும் பொருள் கூட்டுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.


கலங்காது ஞாலம் கருதுபவர் = சின்ன சின்னவற்றிற்கெல்லாம் மயங்காது, உலகத்தையே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;

காலம் கருதி இருப்பர் = தக்கத் தருணத்தை எதிர்பார்த்திருப்பர்.


சின்ன சின்னவற்றிற்கெல்லாம் மயங்காது, உலகத்தையே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள், தக்கத் தருணத்தை எதிர்பார்த்திருப்பர்.


உலகத்தையும் வெல்வோம்; உள்ளங்களையும் வெல்வோம்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்






Post: Blog2_Post
bottom of page