top of page
Search

கூழும் குடியும் ... 554, 754, 759

11/01/2023 (678)

நாடு என்பதன் வரைமுறையைச் சொல்லும்போது தள்ளாவிளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்றார் குறள் 731ல். காண்க 10/01/2023.


மதிப்பு குன்றாத பொருட்களைச் செய்வோர்களும்; அற உணர்வோடு செயல்களைச் செய்வோரும்; கேடு இல்லாத செல்வத்தைக் கொண்டவர்களும் சேர்ந்தால் அதுதான் நாடு.


அதாவது, மூன்று பண்புகளையும் ஒருங்கே அமைந்திருக்கும் குடிகள் பெருமளவில் இருப்பின் அதுதான் ஒரு நாடாக பரிணமிக்க இயலும். அதாவது, அதுதான் நாடு!


ஒரு நாட்டிற்கு முக்கியமானது மக்கள், அதிலும் மிக முக்கியமானது, அவர்கள், தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி அறவழியில் பொருளை ஈட்டுவது.


அறவழியில் வந்தப் பொருளின் பயன் என்னவென்றால் அது மேலும், மேலும் அறங்களை வளர்க்கும், இன்பத்தையும் அளிக்கும். இது ஒரு சுழற்சி போல நடக்கும். அதனால் நாடு உயரும்; நிலைத்து நிற்கும்!


அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து

தீதின்றி வந்த பொருள்.” --- குறள் 754; அதிகாரம் – பொருள் செயல் வகை


அதாவது, பொருளை அறவழியில் சேர்க்கவேண்டும். அவ்வாறில்லாமல் “அடித்துப் பிடுங்குவது” அறத்தையும் வளர்க்காது, இன்பத்தையும் தராது. இது தனி மனிதருக்கும் பொருந்தும். அரசுக்கும் பொருந்தும்.


எதையுமே மென்மையாக கையாளும் நம் பேராசான், அதிகாரத் தொனியோடு, அவசரமாகச் சொன்ன ஒரே ஒரு குறள், நாம் ஏற்கனவே சிந்தித்தக் குறள்தான் மீள்பார்வைக்காக காண்க 29/01/2021:


செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல்.” --- குறள் 759; அதிகாரம் - பொருள் செயல் வகை


செய்ய வேண்டியது எதுவென்றால் “பொருள்! அதுதான், நம்மை உலக அளவில் உயர்த்தும். மாற்றார்களின் ஆணவத்தை அறுக்கும் கத்தி அதுதான். அதைவிட வேறு ஒன்று கிடையாது என்று மேலும் அழுத்தமாக்ச் சொல்கிறார். இது நிற்க.


சரி, நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கொடுங்கோன்மை அதிகாரத்திற்கு வருவோம்.


ஒரு அரசு கொடுங்கோன்மையைக் கையாண்டால், அதாவது தன் மக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கினால் என்ன ஆகும்?


அந்த அரசு அல்லது தலைமை, அதுகாறும் சேர்த்து வைத்திருந்த கூழினை இழக்குமாம். அது மட்டுமல்லாமல், அந்த மக்களின் நம்பிக்கையும் இழந்து விடுவார்களாம்.


கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.” --- குறள் 554; அதிகாரம் – கொடுங்கோன்மை


சூழாது கோல்கோடிச்செய்யும் அரசு = விளைவுகளை எண்ணாது, அறவழிகளை வளைத்து, நெறித்து கொடுங்கோலனாக அரசு நடந்தால்; கூழும் குடியும் ஒருங்கிழக்கும் = சேர்த்து வைத்திருக்கும் பொருளையும், அதை மேலும் ஈட்டக் கூடிய குடிகளையும் ஒரே சமயத்தில் இழந்துவிடுவார்கள்.


‘பொருள்’ என்னும் சொல்லுக்கு ‘கூழ்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். கூழ் என்றால் சாரம் என்று பொருள்படும். மனிதர்களின் சாரம் என்பது அவர்கள் ஈட்டும் பொருள். அதனால் கூழ் என்று ஆகி வருகிறது.


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


முந்தையப் பதிவுகளுக்கு www.easythirukkural.com




Post: Blog2_Post
bottom of page