top of page
Search

செறுவார்க்கு ... 869, 870

25/08/2023 (903)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பகைமாட்சியில் ஒருவன் எப்படியெல்லாம் இருந்தால் அவனின் எதிராளிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லிக் கொண்டு வருகிறார்.


குறள் 868 இல் எப்படி ஒருவன் குணம் இல்லாமல் குற்றங்கள பல செய்து கொண்டிருந்தால் அவன் தம் எதிராளிகளுக்கு ஒரு அரணாகாவே இருப்பான் என்றார்.


அடுத்துச் சொல்வதுதான் அதைவிட ஆச்சரியத்தைத் தூண்டுவது. அஃதாவது, அறிவில்லாது எதற்கெடுத்தாலும் அஞ்சும் பகைவனைப் பெற்றால் அவனை எதிர்த்து நிற்போருக்கு உயர்ந்த இன்பங்கள நீங்காதாம்.


இதோ அந்தக் குறள்:


செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.” --- குறள் 869; அதிகாரம் – பகைமாட்சி


சேண் = உயர்ந்த; இகவா = நீங்க மாட்டா

அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் = நல் அறிவு இல்லாமல் எதற்கெடுத்தாலும் அஞ்சும் பகைவரை எதிர்கொள்வது; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா = அவரை எதிர்ப்பவர்களுக்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.


அஃதாவது, அறிவில்லாத பகைவர்களையும் அஞ்சும் பகைவர்களையும் எளிதில் வெற்றி கொள்ளலாம் என்கிறார்.


இந்தப் பகைமாட்சி அதிகாரத்திற்கு முடிவுரையாக ஒன்றைச் சொல்ல வேண்டும் என நினைத்த நம் பேராசான் ஒரு அழகிய கருத்தைச் சொல்கிறார்.


சின்ன சின்ன வெற்றிகள் பெரிய வெற்றிகளுக்குத் துணை. எல்லாவற்றிற்கும் பயிற்சி தேவை. இதுதான் அடிப்படைக் கருத்து.


“கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்போம்.


அஃதாவது, நம் வீட்டின் மேல் இருக்கும் கோழியையே பிடிக்காதாவன் வானத்திற்குச் சென்று வைகுண்டம் போவேன்னு சொன்னால் நம்பவா முடியும் என்பது ஒரு பொருள்.


இன்னுமொரு பொருள்: சிறிய முயற்சியில் செய்யக் கூடியச் செயலைக்கூட செய்யமாட்டாதவனுக்கு வைகுண்டப் பதவிதான் என்றும் பொருள். அதாங்க அவன் காலி!


சரி, நாம் அந்தக் குறளுக்கு வருவோம்.


கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.” --- குறள் 870; அதிகாரம் – பகைமாட்சி


கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை = நல்ல பல அறிவு நூல்களைக் கல்லாதவன் பகைவனாக அமைந்தால் அவனை வெல்வது எளிது; அதனால் கிடைப்பது சிறுபொருள்தான் என்றாலும் அதனை முயன்று அடையாதவனை;

எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது = அவனுக்கு எப்போதும் புகழ் வந்து சேராது.


நல்ல பல அறிவு நூல்களைக் கல்லாதவன் பகைவனாக அமைந்தால் அவனை வெல்வது எளிது; அதனால் கிடைப்பது சிறுபொருள்தான் என்றாலும் அதனை முயன்று அடையாதவனுக்கு எப்போதும் புகழ் வந்து சேராது.


ஒல்லான் என்றால் அடைய மறுப்பவன், சேர மறுப்பவன் என்று பொருள்.


“ஒல்லும்” என்றால் இயலும் என்று பொருள். “ஒல்லாது” என்றால் இயலாது என்ற மறுதலைப் பொருளைத் தரும். காண்க 19/02/2021 (33), 08/10/2022 (586), 17/01/2023 (684), 09/05/2023 (796).


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Post: Blog2_Post
bottom of page