top of page
Search

பேதைமையுள் பேதைமை என்பது ... 831,832

06/08/2023 (885)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பொருட்பாலில் இறைமாட்சி அதிகாரம் தொடங்கி கூடாநட்பு அதிகாரம் முடிய ஒரு தலைமைக்குச் சிறந்த செல்வங்களான அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் எடுத்துச் சொன்னார்.


இனி, அத்தலைமைக்கும் அவரால் உருவாக்கியும் காக்கப்பட்டும் வரும் செல்வங்களுக்கு அழிவு வராமல் இருக்க இப்போது பேதைமை குறித்து விளக்குகிறார்.


பேதைமை என்பது யாதெனின் இன்ன இன்ன கேடுகள் இதனால் நமக்கு விளையும் என்பதுகூட அறியாமலும், தெரியாமலும் இருப்பது. அவர்களின் இயல்புகளைக் கூறுகிறார். அந்தக் குறிப்புகளை உள்வாங்கிக் கொண்டு அதனைத் தவிர்த்தல் நலம்.


இந்த அதிகாரத்தின் முதல் பாடலிலேயே பேதைமையை வரையறுத்துச் சொல்லிவிட்டார். அந்தப் பாடலை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 13/11/2021 (263), 19/12/2021 (299), 30/07/2022 (519).


பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்

டூதியம் போக விடல்.” --- குறள் 831; அதிகாரம் - பேதைமை


பேதைமை என்ற ஒன்று என்னவென்றால் நமக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஆர்வத்தைச் செலுத்தி, நமக்கு பயன் தருவதைக் கவனிக்காமல் விடுவது.


சரி, இதைவிட பேதைமை இருக்கிறதா என்றால் இருக்காம். அதை பேதைமையுள் எல்லாம் பேதைமை என்கிறார்!


அவைதாம்: வாண்டடா (wanted) போயி வண்டியிலே ஏற்றது; அளவுக்குமீறி ஆசைப் படுவது; தகுதிக்குமீறி தலையைக் கொடுப்பது ... இப்படிப் பல!


நமக்கு ஒத்துவராததைப் பிடித்துக் கொண்டு மல்லுக்கட்டுவதுதான் பேதைமையுள் பேதைமை. பாயவும் தெரியணும், பதுங்கவும் தெரியணும் அதுதான் அறிவு.


பேதைமையுள் எல்லாம் பேதைமை என்பதற்கு நம் பேராசான் பயன்படுத்தும் தொடர் “கையல்லதன்கண் காதன்மை”. அதாவது, நம் கைக்கு அடங்காமல் இருக்கும் செயலின் மீது நமது அடங்கா ஆசையை வைப்பது!


பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்.” --- குறள் 832; அதிகாரம் – பேதைமை


பேதைமையுள் எல்லாம் பேதைமை = பேதைமை என்று சொல்வதுள் எல்லாம் பேதைமை என்பது; கையல்ல தன்கண் = கைக்கு அடங்காமல் இருக்கும்: செயல் = செயல்களில்; காதன்மை = மிக நெருக்கமான காதலை அதன் மேல் வைப்பது.


பேதைமை என்று சொல்வதுள் எல்லாம் பேதைமை என்பது என்னவென்றால் கைக்கு அடங்காமல் இருக்கும் செயல்களில் மிக நெருக்கமான காதலை வைப்பது.


1969 இல் வெளிவந்த ஒரு வெற்றித் திரைப்படம் மெக்கென்னாவின் தங்கம் (Mackenna’s Gold). தங்கத்தின் மீதான மோகம் எப்படி பலதரப்பட்ட மக்களை எவ்வாறெல்லாம் சிதைக்கிறது என்பதைச் சொல்வதுதான் கதை. இறுதியில் யாருக்கும் ஒரு துளி தங்கம்கூட கிடைக்காது என்பது மட்டுமல்ல அனைவரும் அழிந்தும் போவார்கள். இதுதான் பேதைமையுள் பேதைமை.


தங்கம் என்பது ஒரு குறியீடுதான்! இதை மிக அழகாக நமது கவியரசர் கண்ணதாசன் இவ்வாறு சொல்கிறார்:


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே ...” திரைப்படம் – திருவருட்செல்வர் (1967); கவியரசர் கண்ணதாசன்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page