top of page
Search

பொள்ளென செறுநரைக் காணின் ...487, 488

16/11/2022 (622)

‘பொள்ளென’ என்றால் விரைவுக் குறிப்பு என்பதைப் பார்த்தோம்.


நம் பேராசான் காலமறிதலில் என்ன சொல்கிறார் என்றால் பகை நம்மை கோபப்படுத்தினால், பொள்ளென அதாவது சடக்குன்னு தன் கோபத்தைக் காட்டமாட்டார்களாம். அதாவது, முகக் குறிப்பிலும்கூட காட்டமாட்டார்களாம். அதாவது ‘புறம் வேரார்’ என்கிறார்.


யார் அது? ஒள்ளியவர்கள்தான்! அதாவது அறிவுடையவர்கள்.


பின் என்ன செய்வார்களாம்?


காலம் அறிந்து பகைவரை சாய்க்க நினைப்பவர்கள், தாக்குவதற்கு தக்க காலம் வரும் வரை அந்தக் கோபத்தை உள்ளுக்குள்ளே போட்டு வைத்துக் கொள்வார்களாம். அதாவது உள்ளேயே வேர்த்துக் கொள்வார்களாம்.


கோபத்தினால் வெளிய வேர்த்துக் கொட்ட மாட்டார்களாம்!


‘வேர்த்தல்’ என்பதற்கு வியர்த்து கொட்டுவது என்பது இப்போது வழக்கில் உள்ள பொருள்.


ஆனால், அக்காலத்தில் ‘சினத்தல்’ என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.


சரி குறளுக்கு வருவோம்.


பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஓள்ளி யவர்.” --- குறள் 487; அதிகாரம் – காலமறிதல்


ஓள்ளியவர் = அறிவுடையவர்கள்; ஆங்கே பொள்ளென புறம்வேரார் = மாற்றார் சினமூட்டும் காரியத்தைச் செய்தாலும் வெளியே தெரியும்படி கோபத்தைக் காட்டமாட்டார்களாம்; காலம்பார்த்து உள் வேர்ப்பர் =தக்க தருணம் வரட்டும் என்று சினத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்களாம்.


அறிவுடையவர்கள், மாற்றார் சினமூட்டும் காரியத்தைச் செய்தாலும் வெளியே தெரியும்படி கோபத்தைக் காட்டமாட்டார்களாம்; தக்க தருணம் வரட்டும் என்று சினத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்களாம்.


நம்ம பேராசான் சாதரணமானவர் இல்லை. அவர் ஒரு பயங்கரவாதி!

ரொம்பவே உஷாராக இருக்கனும்.


அவர் சொல்வது உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகக் கூட இருக்கும்.

அவர் ஒரு வழி சொல்கிறார். என்னவென்றால், பகைவரைக் கண்டால் தலைமேல் வைத்து சுமக்க வேண்டுமாம்.


நம்மாளு: இது என்ன நியாயம்? நாம ஏன் சுமக்கனும்? அதுவும் தலைமேலே!


ஆசிரியர்: கொஞ்சம் பொறுக்கனும். நம்ம பேராசானின் கெட்டித்தனம் என்னவென்றால், அப்போதுதான் அந்த பகைக்கு இறுதிக்காலம் வரும்போது தலைகீழாக கவிழ்த்து காலி பண்ணிடலாமாம்.


(நம்மாளு மைண்ட் வாய்ஸ்: நம்ம பேராசான் ஒரு வேளை அரசியல்வாதியாக இருந்திருப்பாரோ?)


நம்: இப்படியெல்லாம் கூடவா சொல்லியிருக்கார் நம்ம பேராசான்? ஆச்சரியமாக இருக்கு ஐயா. அந்தக் குறளைச் சொல்லுங்க ப்ளிஸ்.


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.” --- குறள் 488; அதிகாரம் – காலமறிதல்


செறுநர் = பகைவர் / மாற்றார்; செறுநரைக் காணின் சுமக்க = பகைவரைக் கண்டால் பணிக / தலைமேல் சுமக்க; இறு = அழிவு; வரை = எல்லை; = இறுவரை காணின் தலை கிழக்காம் =(பகைவரின்) அழிவுக்கான காலம் வந்துவிட்து என்று தோன்றிவிட்டால் தலை கீழாம். அதாவது, கவுத்துடுங்க.


இது ஏதோ என் சரக்கு என்று எண்ணவேண்டா. மணக்குடவப் பெருமான் உரையைப் பாருங்கள். அவர் சொல்செட்டு மிக்கவர். இரு வரிகளிலே நான் நீட்டி அளந்ததை அழகாகச் சொல்கிறார் இவ்வாறு:


“பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.” --- மணக்குடவப் பெருமான்


பரிமேலழகப் பெருமான் அதை மேலும், இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்:


“... ‘அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது.”


மேற்கண்ட இரு குறள்களிலும், பகைமையை எப்படி வெளிக்காட்டாமல் அழிப்பது என்பதை எடுத்துச் சொன்னார்.


பி.கு.: “சொல்செட்டு” என்றால் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page