top of page
Search

வலியார்க்கு மாறேற்றல் ... 861, 867, 506

20/08/2023 (898)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

புல்லறிவாளர்களுக்கு மற்றவர்களுடன் மாறுபாடு எளிதில் தோன்றுவதால் இகல் என்னும் அதிகாரத்தை அடுத்து வைத்தார். இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் முன்பே சிந்தித்துள்ளோம்.


பொதுப்பட இகலைத் தவிர்த்தல் நலம் என்றவர், அவ்வாறு தவிர்ப்பது ஒரு தலைமைக்கு எல்லாக் காலத்திலும் அரிது என்பதனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் பகைவர்கள் ஆகிவிடுபவர்களை எப்படி இனம் பிரித்து கையாள வேண்டும் என்பதைப் பகை மாட்சி என்னும் 87 ஆவது அதிகாரத்தில் விளக்குகிறார்.


இந்த அதிகாரத்தில் இருக்கும் ஒரு பாடலை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 16/12/2021 (296), 10/05/2022 (438). மீள்பார்வைக்காக:

அடுத்துக் கெடுப்பவர்களை என்ன கொடுத்தாகிலும் பகையாக ஆக்கி எதிர் நிற்றல் நலம் என்கிறார்.


கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.” --- குறள் 867; அதிகாரம் – பகை மாட்சி


ஓம்பல் என்னும் சொல் ‘பாதுகாத்தல்’ என்ற பொருளிலும் ‘தவிர்த்தல்’ என்ற பொருளிலும் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபட்டப் பொருளை வெளிப்படுத்தும் ஓர் சொல். அத்தகையச் சொல்களை ஆங்கிலத்தில் contronyms என்றழைப்பர் என்றும் முன்பு சிந்தித்துள்ளோம். காண்க 13/01/2022 (322).


ஓம்புக என்னும் சொல்லும் அவ்வாறே.


நாம் முன்பு தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 04/12/2022 (640). மீள்பார்வைக்காக:


அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.” --- குறள் 506; அதிகாரம் – தெரிந்து தெளிதல்


சுற்றம் மீது பற்று அற்றாரைச் சேர்த்துக் கொள்ளுதலை விலக்குக; அவர்கள் இந்த உலகத்தோடு எந்தத் தொடர்பும் இலர்; ஆதலால், இந்த உலகத்தின் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.


ஓம்புக என்ற சொல்லை இரு பாடல்களில் கையாண்டுள்ளார். மேற்கண்டப் பாடலில் ஓம்புக என்றால் விலக்குக, தவிர்க்க என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.


ஓம்புதல் என்றால் பொதுவாகப் பாதுகாத்தல். இதனின் நீட்சி எப்படிச் செல்கிறது என்றால் தனியாக விலக்கிப் பாதுகாத்தல் என்றாகிறது. அது மீண்டும் விலக்கி வைத்தல் என்றாகிறது!


அஃதாவது, ஓம்புக என்பதற்கு பாதுகாத்தல் என்றும் விலக்குதல் என்றும் பொருள் இரு வேறு முனைகளாக அமைகின்றன! இதுதான் தமிழ்! இடம் சுட்டி பொருள் காண்பது மிக முக்கியமாகிறது.


சரி, நாம் இன்றைய குறளுக்கு வருவோம்.


வரும் பாடலில் இந்த இரு வேறு பொருள்களை இட்டு பொருள் எடுத்தாலும் பொருள் சரியாக வருவது ஆச்சரியமாக உள்ளது!


பகையின் திறம் எத்தகையது என்பதை நாளும் கணக்கிடல் வேண்டும். அவர்களை நம்மால் எதிர்த்து வெற்றி கொள்ள முடியும் என்றால் போர்!

அவ்வாறில்லை என்றால் பொறுமை! அவ்வளவே.


வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.” --- குறள் 861; அதிகாரம் – பகை மாட்சி


வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக = நம்மைவிட பகை வலிமையாய் இருப்பின் அதனை விலக்குக (பாதுகாத்து வையுங்கள்! நாம் வலிமை பெறும்வரை!)

மெலியார்மேல் ஓம்பா மேக பகை = பகையை வெற்றி கொள்ள முடியுமென்றால் பொறுமை தேவையில்லை. பகையின் பின் சென்று வெற்றி கொள்க.


நம்மைவிட பகை வலிமையாய் இருப்பின் அதனை விலக்குக. (அதனை பின்னாளுக்குப் பாதுகாத்து வையுங்கள்! நாம் வலிமை பெறும்வரை!)

பகையை வெற்றி கொள்ள முடியுமென்றால் பொறுமை தேவையில்லை. பகையின் பின் சென்று வெற்றி கொள்க. கொட்டட்டும் போர் முரசம்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page