top of page
Search

அற்றேம்என்று அல்லற் ... 626, 1040, 618

25/03/2023 (751)

உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளை மீண்டும் பார்ப்போம்! காண்க 17/09/2021 (206), 28/09/2021 (217), 24/01/2022 (333) மீள்பார்வைக்காக:


இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம் என்னும் நல்லாள் நகும்.” --- குறள் 1040; அதிகாரம் – உழவு


இலமென்று = ஒரு பொருளும் இல்லையே என்று; அசைஇ இருப்பாரை = அசையாமல் உட்கார்ந்து இருப்பவரை; காணின் = கண்டால்; நிலமென்னும் நல்லாள் நகும் = அள்ள அள்ள கொடுக்கும் தன்மைத்தான நிலமென்னும் நல்லாள் தம்மை பயன்படுத்த வில்லையே என்று மனம் புண்பட்டுச் சிரிப்பாள்.


இது நிற்க. நாம் இடுக்கண் அழியாமையில் இருக்கிறோம்.


கார் இல்லையேன்னு கவலைப்படாதே; கால் இருக்கேன்னு போயிட்டேயிரு!

வீடு இல்லையேன்னு கவலைப்படாதே; ரோடு இருக்கேன்னு விடு நடையை!


உள்ளதைக் கொண்டு உள்ளத்தைச் சீர் செய்யாமல், என்ன செய்யவேண்டுமோ அதையும் செய்யாமல் இருப்பவர்கள், அது இல்லையே, இது இல்லையே என்று கவலைப்படுவது மட்டும் சரியா? – இப்படித்தான் நம் பேராசான் கேட்பது போலத் தெரிகிறது வரும் குறளில்!


அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று

ஓம்புதல் தேற்றா தவர்.” --- குறள் 626, அதிகாரம் – இடுக்கணழியாமை


பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றாதவர் = இப்போது உள்ளதையாவது பெற்றோமே என்று எண்ணி உள்ளத்தைச் சீர் செய்யாமல், என்ன செய்யவேண்டுமோ அதையும் செய்யாமல் இருப்பவர்கள்;

அற்றேம் என்று அல்லற்படுபவோ = அது இல்லையே, இது இல்லையே என்று கவலைப்படுவது மட்டும் சரியா?


சரி, இந்தக் குறளுக்கு இப்படித்தான் உரையா என்றால் இல்லை!


என் மனம், மொழி, மெய்களால் என்றும் வணங்கும், எனது உயிரினும் மேலான பல அறிஞர் பெருமக்கள் வேறு ஒரு பொருள் காண்கிறார்கள்.


அதையும் பார்ப்போம்:


அறிஞர் வ.சுப. மாணிக்கனார்: செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ?


முதறிஞர் மு.வரதராசனார்: செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ?


பரிமேலழகப் பெருமான்: வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?


அதாவது, செல்வம் இருக்கும்போது பாதுகாத்துக் கொள்ளாதவர்கள் வறுமை வந்தபோது துன்பப்படுவது ஏன்? என்ற பொருளில்தான் பெரும்பாலன உரைகள் இருக்கின்றன. இது ஒரு தத்துவார்த்தமான கேள்வியைப் போல இருக்கிறது. மனதை ஆற்றுப்படுத்துவது போல இருக்கிறது.


நம் பேராசான் இடுக்கண் அழியாமை அதிகாரத்தில் நம்மை முன்னோக்கி நடக்க வேண்டும் என்கிறார். துன்பங்களைத் தூள் தூள் ஆக்கு என்கிறார். அந்தச் சமயத்தில், ஒரு சமாதானம் சொல்லி அமைதிபடுத்துவாரா என்ன? - என்பதுதான் என் ஐயம். நீங்க என்ன நினைக்கறீங்க?


வேண்டுமென்றால், மீண்டும் அந்தக் குறளை, இடுக்கண் அழியாமை என்ற கண்ணோட்டத்தில், ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்களேன். நன்றி.


முன்பு நாம் பார்த்த ஒரு குறளையும் கவனப்படுத்துவோம். காண்க 21/03/2023 (747).


பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி” --- குறள் 618; அதிகாரம் – ஆள்வினை உடைமை


பொறியின்மை யார்க்கும் பழியன்று = ஏதோ ஒரு வகையில் வளங்களில் குறைபாடுகள் இருப்பது குற்றமாகாது; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி = ஆனால், தன்னிடம் இல்லாததை அறிந்து, உள்ளதைக் கொண்டு உபாயங்கள் செய்து அபாயங்கள் தவிர்க்க முயலாமல் இருப்பதுதான் குற்றம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com




Post: Blog2_Post
bottom of page