top of page
Search

தோன்றின் வினைவலியும் ... 471, 236

01/11/2022 (608)

தெரிந்து செயல் வகையைத் தொடர்ந்து வலியறிதலை வைக்கிறார்.

இந்தப் பாடல்கள் எல்லாம் பொருட்பாலில் உள்ள அரசு இயலில் அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மன்னர்களுக்கும், தலைவர்களுக்கும், தலைமைப் பொறுப்பில் வரவேண்டும் என்று நினைப்பவர்கட்குமானது.


வலி என்றால் strength! போரில், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் நான்கு வலிமைகளைக் கணக்கிடவேண்டுமாம்.


முதலில் அந்தப் போட்டியின் தரம் அல்லது திறன் நிலை (competency level) எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அறியவேண்டுமாம். அதை நான்காக பகுக்கிறார்கள்: ஆரம்ப நிலை, இடை நிலை, முன்னேறிய நிலை, மிகவும் முன்னேறிய நிலை (Beginners, intermediate, advanced, and very advanced) என்று பிரிக்கிறார்கள்.


நம்முடைய நிலையையும், அந்தப் போட்டியின் நிலையையும் ஒப்பிட்டு துணிய வேண்டுமாம்.


இது மட்டும் போதாதாம். நம்முடன் மோதப் போகும் மாற்றானின் வலிமை எவ்வாறு உள்ளது என்பதையும் கவனித்து அறிய வேண்டுமாம்.


சரி, இந்த மூன்று வலிமைகளையும் ஆராய்ந்தபின் நமக்குத் துணையாக நிற்பவர்களின் வலிமையையும் அறிந்த இருக்க வேண்டுமாம்.


துணையாக இருப்பவர்கள், நமது குருமார்களாக இருக்கலாம், நம்மை பயிற்றுவிர்பவர்களாக (coaches) இருக்கலாம். உடன் இணைந்து போராடுபவர்களாகவும் இருக்கலாம்.


இந்த வலிமைகளையெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து செயலில் இறங்க வேண்டுமாம்.


‘புகழ்’ எனும் அதிகாரத்தில் ஒரு பாடலை நாம் முன்பு ஒருமுறை சிந்தித்துள்ளோம். காண்க 28/06/2021 (126), 29/06/2021 (127).


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.” --- குறள் 236; அதிகாரம் – புகழ்


‘தோன்றும் போதே’ என்பதற்கு என்ன பொருள்? ‘தோன்றும் போதே’ என்பதற்கு பொருள் ‘பிறக்கும் போதே’ ன்னு பொருள் கண்டால் இந்த குறள் பிழையாகும். ஒருவன் தன் கடமைகளை செய்ய முற்படும் போது அதற்கு உரித்தான அனைத்தையும் ஆராய்ந்து தோன்ற வேண்டும். அதுதான் ‘தோன்றின் புகழொடு’ தோன்றுதல் என்று ஆசிரியர் உணர்த்தியதை உள்வாங்க வேண்டும்.


இது நிற்க. இன்றைய குறளுக்கு வருவோம்.


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.” --- குறள் 471; அதிகாரம் – வலியறிதல்


வினைவலியும் = செய்யவேண்டிய செயலின் தன்மையையும்; தன்வலியும் = அதை செய்துமுடிக்கும் ஆற்றல் தன்னிடம் உள்ளதா என்று உறுதி செய்துக்கொண்டும்; மாற்றான் வலியும் = நம்முடன் போட்டிக்கு வருபவரின் வலிமையையும்; துணைவலியும் = நமக்கு உதவுபவர்களின் திறமையையும்; தூக்கிச் செயல் = கணக்கிட்டு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றால் துணிய வேண்டும்.


செய்யவேண்டிய செயலின் தன்மையையும், அதைச் செய்துமுடிக்கும் ஆற்றல் தன்னிடம் உள்ளதா என்று உறுதி செய்துக்கொண்டும், நம்முடன் போட்டிக்கு வருபவரின் வலிமையையும், நமக்கு உதவுபவர்களின் திறமையையும் கணக்கிட்டு, வெற்றி வாய்ப்பு அதிகம் என்றால் துணிய வேண்டும்.


இல்லை என்றால், தக்கத் தருணம் வாய்க்கும்வரை விழித்திருக்க வேண்டும்!


லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரனும்! (Lateஆ வந்தாலும் latestஆ வரனும்!)


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page