top of page
Search

வகையற செய்தக்க ... 465, 466

27/10/2022 (603)

“எதை பண்ணாலும் PLAN பண்ணி பண்ணனும்” ன்னு ஒரு வடிவேலு வசனம் இருக்கு.


திட்டமிடல் (PLANNING) எந்த ஒரு செயலுக்கும் மிக முக்கியம். “களமும், காலமும்” நாம்தான் குறிக்க வேண்டும் என்று பல முறை என் ஆசிரியர் கூறியுள்ளார்.


குறிப்பாக மூன்று வலிமைகளை பரிசோதனை செய்து திட்டமிடனுமாம். அவையாவன: 1. வலியறிதல்; 2. காலமறிதல்; மேலும் 3. இடம் அறிதல்.


நாம் சரியாகத் திட்டமிடாமல் ஒரு பகையை அல்லது போட்டியை வென்றுவிட நினைப்பது எப்படி இருக்கும் என்றால் அந்தப் பகைக்கு பாத்திகட்டி நீர் பாய்ச்சி செழுமையாக வளரப்பதைப் போலவாம். நான் சொல்லலைங்க நம்ம பேராசான் சொல்கிறார்.


“அற” என்ற சொல்லுக்கு முழுவதும், தெளிவாக, மிகவும், செவ்வையாக என்ற பொருள்களில் பயின்று வருகிறது.


“சூழாது” என்ற சொல்லுக்கு ‘எண்ணாது’ என்ற ஒரு பொருள் இருக்கு.


வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதுஓர் ஆறு.” --- குறள் 465; அதிகாரம் – தெரிந்து செயல் வகை


அற = முழுவதும்; சூழாது = எண்ணாது; எழுதல் = செய்யத் துணிவது; ஆறு = வழி;

வகை அறச் சூழாது எழுதல் = வலியறிதல், காலமறிதல், இடம் அறிதல் முதலிய வகைகளை முழுவதும் எண்ணாது எழுதல்;

பகைவரைப் பாத்திப் படுப்பது ஓர் ஆறு = பகைவர்களைப் பாத்தி கட்டி வளர்த்துவிடும் ஒரு வழி.


திட்டமிடாமல் செய்யும் செய்கை மாற்றார்களை மேலும் திடப்படுத்தும்.


திருக்குறளின் முதல் நோக்கம் (objective) என்னவென்று கேட்டால், நம்மையெல்லாம் ஆற்றுப் படுத்துவதுதான். அதாவது சரியான வழியில் திருப்புவதுதான். யார், யாருக்கு எது சரி, எது தவறு என்பதை எடுத்துச் சொல்லும் நூல்தான் திருக்குறள்.


திருக்குறளை ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘அறம்’. அது என்ன ‘அறம்’ என்றால் “விதித்தது செய்து விலக்கியன ஒழித்தல்” அவ்வளவே.


செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்; செய்யக்கூடாததைச் செய்யக் கூடாது. இது குழந்தைக்குக்கூட தெரியும். ஆனால். நாம் இதை மாறி மாறிச் செய்து சிரமத்திற்கு ஆட்படுகிறோம். அதற்குப் பிறரை அல்லது பிற காரணங்களைக் காட்டுகிறோம். இது நிற்க.


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.” --- குறள் 466; அதிகாரம் – தெரிந்து செயல் வகை


செய்தக்க அல்ல = செய்யக்கூடாதது, தவிர்க்க வேண்டியது;

செய்தக்க அல்ல செயக்கெடும் = விலக்கவேண்டியதை விரும்பிச் செய்வது வீண் வேலை. அதனால் அழிவுதான் வரும்;

செய்தக்க செய்யாமை யானும் கெடும் = செய்ய வேண்டியவைகளை செய்யாமல் விட்டாலும் அழிவுதான்.


“செயத்தக்க அல்ல” செயல்கள் எவை? (4 மதிப்பெண்)

பரிமேலழகப் பெருமானின் பதில்:

பெரிய முயற்சி எடுத்து ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனால் கொஞ்சமாகத்தான் பலன் இருக்கும் என்றால் அதனைத் தவிர்க்கனும்.


சின்ன விஷயம்தான் ஆனால் அதுலேயும் நமக்கு கொஞ்சம் (doubt) சந்தேகம் இருக்கு என்றால் அதனையும் தவிர்க்கனும்.


என்ன சந்தேகம்? அதாவது அந்தச் செயல் பின்னாடி நமக்கு பிரச்சனை கொடுக்குமா? என்பதை யோசித்து அது அப்படித்தான் என்றால் அதைத் தவிர்க்கனும்.


“செய்தக்கச் செயல்கள்” என்னென்ன? (1 மதிப்பெண்)

பரிமேலழகப் பெருமானின் பதில்:


மேலே உள்ள கேள்வியின் பதிலுக்கு opposite (மறுதலை) தான்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்





Post: Blog2_Post
bottom of page